Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி நேற்று நள்ளிரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று  இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்  நள்ளிரவு 12 க்கு நிறைவு பெற்றுள்ளது. 


ஈரோடு வில்லரசன் பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,
கே.வி. ராமலிங்கம்,  செல்லூர் ராஜூ , உதயகுமார் , உடுமலை ராதாகிருஷ்ணன் எஸ்.பி.வேலுமணி , விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைந்தது.


திண்ணைப் பிரச்சாரம் 


இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உதயகுமார் , அம்மாவின் சாதனைகளையும் , எடப்பாடி பழனிசாமி சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு கேட்போம் என்றும் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு  வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார். 


அ.தி.மு.க.வினப் பொறுத்தவரையில்  உட்கட்சியில் மட்டுமின்றி, கூட்டணி தரப்பினர் மத்தியிலும் இழுபறி நீடித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க தரப்பு வேட்பாளர் பட்டியலில் ஈரோடு முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ தென்னவன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கே.சி பழனிசாமிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.   அ.தி.மு.க. இடைத்தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு அளிக்க பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பா.ஜ.க.வினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது,


கொங்கு மண்டலம் அதிமுகவின்  எஃகு கோட்டை இதனை யாராலும் தகர்க்க முடியாது கூறியுள்ளார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான அணியின் தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. இதனை யாராலும் தகர்க்க முடியாது. அதிமுகவின் வாக்குகள் (ஓ. பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி) சிதறிவிடும் என்பதெல்லாம் இந்த மாவட்டத்தில் செல்லுபடியாகாது. மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் நாடகள் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதிலை அளித்திருக்கிறோம். மேலும் இந்த இடைத்தேர்தல் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்" என அவர் கூறியுள்ளார்.