திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என திமுக வேட்பாளர் சந்திரகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் மொசுவண்ண வீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகச்சிறப்பாக உள்ளது. மக்களை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறோம். நடந்து சென்று சந்தித்திருக்கின்றோம். முதலமைச்சர் ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மக்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சென்றடைந்துள்ளது. அதனால் மக்கள் பெருமையாக பேசுகிறார்கள். எங்களுடைய வெற்றி உறுதி. எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. மக்கள் தங்களின் ஜனநாயக கடைமை ஆற்ற வேண்டும்.
கண்டிப்பாக மக்களுக்கு இந்த தேர்தலில் சலிப்பு கிடையாது. இது திணிக்கப்பட்ட தேர்தல் கிடையாது. இது எதிர்பாராத விபத்து காரணமாக ஏற்பட்ட தேர்தல். எனவே மக்களிடம் சலிப்புத்தன்மை இல்லை.
திருமகன் ஈவெரா அகால மரணம் அடைந்தார். அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனால் மக்களுக்கு சலிப்பு இல்லை. வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.
எனக்கு தெரிந்து எல்லாத் தேர்தல்களிலும் எல்லா அமைச்சர்களும் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அதை பெரிதாக பேசவில்லை. இப்போது வரவில்லை என்றதும் பேசுகிறார்கள். கடந்த தேர்தல்களில் அமைச்சர்கள் வேலை பார்த்ததற்கு எதிர்க்கட்சிகள் குற்றமாக சொன்னார்கள்.
ஆனால் இப்போது ஸ்டாலின் ஐயா சொல்லிட்டார். உங்கள் தொகுதியில் இருக்கும் ஆட்களை வைத்து வேலையை பாருங்கள். வெற்றி கண்டிப்பாக வரும் என்று. பொதுத்தேர்தலை எப்படி சந்திப்பீர்களோ அப்படியே சந்தியுங்கள். முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் வரவில்லை என்றால் அவர் ஏற்கெனவே சொல்லிவிட்டார். முடிந்தால் நானும் துரைமுருகன் அமைச்சரும் முடிந்தால் வருகிறோம். இல்லையென்றால் நீங்கள் வெற்றியோடு வாருங்கள் என்று. மக்கள் மீது நம்பிக்கை இருப்பதாக சொன்னார்.
போட்டியிடாத கட்சிகள் குறித்து எங்களுக்கு ஒன்றும் இல்லை. அது அவரவர் கட்சியின் விருப்பம். 46 பேர் களத்தில் நின்றார்கள் என்றால் நாங்கள் அந்த 46 பேரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். ஆனால் அதில் நான் தனியாக நிற்கிறேன் என்பது உறுதி. இதில் எந்த வேட்பாளர்கள் என்ன வாக்கு வாங்குகிறார்கள் என்பது எனக்கு தேவையில்லாதது.
இந்த தேர்தலில் முடிவு 2026 தேர்தலில் எதிரொலிக்கும். அந்த தேர்தலில் எப்படி பட்ட மாற்றத்தை மக்கள் கொடுக்கப்போகிறார்கள் என்பதைத்தான் இந்த தேர்தல் எதிரொலிக்கப்போகிறது” எனத் தெரிவித்தார்.