இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்.! பொய்யை திருப்பித் திருப்பிச் சொல்லி ஏமாற்றுகிறார்- சீறும் இபிஎஸ்
EPS Campaign chennai : தமிழகத்தில் போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 525 வாக்குறுதிகள் கொடுத்த திமுக அவற்றில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து செய்வதாகச் சொல்லி செய்யவில்லை, நீட் தேர்வுக்கு ரகசியம் இருக்கிறது என்றார். ஆனால் கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக. அதை எதிர்ப்பதும் அதே காங்கிரஸ், திமுக. எப்படி ஏமாற்றுகிறார்கள்..? அதிமுக ஆட்சியில் அம்மா ஒரு வருடம் நீட் விலக்கு பெற்றார், ஆனால், இந்தியா முழுவதும் நீட் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.
இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்
இன்று வரை நீட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. காங்கிரஸ் தலைவரின் மனைவி நீட்டுக்கு எதிராக வாதாடி நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகச் சொன்னார். செஞ்சதெல்லாம் காங்கிரஸ். ஆனால், திமுக நம் மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? பொய்யை திருப்பித் திருப்பிச் சொல்லி ஏமாத்துகிறார்கள். இதுதான் ஸ்டாலினின் இரட்டை வேடம். திமுக ஆட்சியில் 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவானது, அதில் 6999 சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூக நலத்துறை அமைச்சரே சொல்கிறார். போக்சோ என்றால் சிறுமிகள் பாலியல் வழக்கு, இந்த ஆட்சி நல்லாட்சியா? சிறுமிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா..? இப்படி ஆட்சியை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்கிறார்.
கேஸ் மானியம் கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, ரேஷன் கடையில் கூடுதல் சர்க்கரை கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாகச் சொல்லிக் குறைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாகச் சொல்லி உயர்த்தவில்லை. அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் மத்திய அரசு அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் 150 நாட்களாக உயர்த்தப்படும். அத்தனையும் பொய்யான வாக்குறுதிகள், ஏமாற்றுவதில் தான் இவர்கள் நம்பர் ஒன்.
போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம்
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிப்பு. எதிர்க்கட்சி என்ற முறையில் முதல்வர் கவனத்துக்கு கொண்டு வந்தேன். பேட்டி கொடுத்தேன், கண்டுகொள்ளவே இல்லை. போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தடுக்க முடியவில்லை ஏனென்றால் திமுகவினர் துணை நிற்கிறார்கள் அதனால் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. 2 வயது சிறுமி, பாட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
297 அறிவிப்புகள் வெளியிட்டோம். அதில் சில முக்கியமானவை. திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும்.
அதிமுக தேர்தல் வாக்குறுதி
பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம். எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு கடனும் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை பட்டியலிட்டார்.
கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவை அரசே செலுத்தும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயமாக தொழில் தொடங்கினால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தேவையான வட்டியில்லா கடன் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.




















