மேற்கு வங்க மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய தகவலின்படி, மம்தா பேனர்ஜி தலைமயிலான திரிணாமுல் காங்கிரஸ் 196 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 96 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வாங்க மாநிலத்தில் கடந்த ஒரு வருட காலமாக பாஜக தீவிர அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டது. பெரும்பாலான வட இந்திய ஊடகங்களும் மமதாவுக்கு எதிரான போக்கையே செய்தியாக்கி வந்தன.       


இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் தொடர்பாக பணியாற்றி வரும் பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டரில், "பாஜக ஆதரவு ஊடகங்கள்  அனைத்தையும் மிகைப்படுத்தி காட்டுகின்றன. உண்மையில் பாஜக இரட்டை இலக்கு இடைங்களை கூட கடக்க முடியாது. தவறாக நிரூபிக்கப்பட்டால், நான் இந்த இடத்தை விட்டு வெளியேறுவேன்" என்று பதிவிட்டார். 


பின்னர், மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இடம் என்றால் ட்விட்டர் மட்டும் அல்ல, I- PAC நிறுவனத்தை விட்டே வெளியேறுவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார்.  தற்போது, பிரஷாந்த் கிஷோர் கணித்தபடியே பாஜக இரட்டை இலைக்கை கடக்க முடியாமல் போராடி வருகிறது. 


 






இருப்பினும், நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 8,106 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். பாஜகவின் சுவந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார். இந்த தகவல் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.  


 





2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சியமைக்க வைத்ததில் பிரஷாந்த் கிஷோரின் பங்கு அதிகாமாக காணப்பட்டது. இவரின், I- PAC நிறுவனம் மோடியின் பரப்புரைகளையும், யுக்திகளையும் வகுத்துக்கொடுத்தது. 2020-இல் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றினார். 2019ல் நடைபெற்ற ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகங்களை ஜெகன் மோகன் ரெட்டிக்கு வகுத்து கொடுத்தார். கடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் கேப்டன் அமரிந்தர் சிங்கிடம் பாநியாற்றினார்.  2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் அரசியல் பணியை I-PAC நிறுவனம் முன்னின்று நடத்தியது. 


மேற்குவங்கத் தேர்தல்: மேற்குவங்கத்தில் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல்  நடைபெற்றது. எட்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 35 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த   ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.  4-ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது கூச் பெகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெற்றி கொண்டாட்டங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.