நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 பேரூராட்சியில் மணிமுத்தாறு பேரூராட்சியும் ஒன்று, 15 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் 10 பேரும், 1 அதிமுக மற்றும் 4 சுயேச்சை உறுப்பினர்களும் தேர்வாகினர். தென் மாவட்டங்களின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் மணிமுத்தாறு பேரூராட்சியில் அமைந்துள்ளது. 15 வார்டுகளைக் கொண்ட மணிமுத்தாறு பேரூராட்சியில் 9,10,11,12,13 ஆகிய 5 வார்டுகள் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.
மாஞ்சோலை 10ஆம் வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அந்தோணியம்மாளை தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்தது. மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட வரலாற்றில் 90 ஆண்டுகளில் தோட்டத் தொழிலாளிகளில் முதல் பேரூராட்சித் தலைவராக அந்தோணியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். 50 வயதாகும் அந்தோணியம்மாள் 8 ஆம் வகுப்பு வரை படித்து உள்ளார், மணிமுத்தாறு பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணியம்மாள் கூறியது, 4 தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளிகளாக இருந்த நிலையில் முதல்முறையாக பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இதற்கு கழகத் தலைமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் அடிப்படைத் தேவையறிந்து மனமாற சேவையாற்றுவேன் என்று தெரிவித்தார், அந்தோணியம்மாள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உற்சாக மிகுதியில் இதனை கொண்டாடி வருகின்றனர்,