சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் டயர் கடை உரிமையாளரான பத்மராஜன். 1959 ஆம் ஆண்டு ஆத்தூரில் பிறந்த இவர் தனது 30 வயதில் தொடங்கி தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். குறிப்பாக 34 ஆண்டுகளில் 6 ஜனாதிபதி, 6 துணை ஜனாதிபதி, 5 பிரதமர் தேர்தல் உட்பட 242 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.


சுயேட்சை வேட்பாளர்:


இதுவரை 243 தேர்தல்களில் எந்தவித கட்சியையும் சாராமல் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார். 1988 ஆம் ஆண்டு தனது 30 வயதில் நண்பர்களுடன் விளையாட்டாக தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். பிற்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பெரும் தலைவர்களை எதிர்த்து போட்டியிட வைத்துள்ளது. 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 5 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார். இதில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இவர் முதல்வர் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இவர் பெற்ற அதிகபட்ச வாக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 6,273 வாக்குகள் பெற்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வீரக்கல்புதூரில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் 0 வாக்கு பெற்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளா மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு 1,858 வாக்குகள் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி உட்பட்ட 11 முதல்வர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார்.



243வது வேட்புமனு தாக்கல்:


நேற்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தெலுங்கானா மாநில தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உபேந்திரா ரெட்டியிடம் வழங்கி உள்ளார். இதை அவரது 243 வது வேட்பு மனு தாக்கல் ஆகும். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேட்பு மனுக்கான பரிசீலனை நடைபெற்று பத்ம ராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.


ஒரு கோடி செலவு:


1993 ஆம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற்ற தேர்தலில் தனது 3 வயது மகன் ஸ்ரீஜேஷ் பத்மராஜனை தேர்தலில் களமிறங்கியுள்ளார். மேலும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிமியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் பத்மராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளது. 34 ஆண்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கூறுகிறார். டயர் கடை வைத்துள்ள இவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் என்று அனைவரும் அன்போடு அழைக்கின்றனர்.



விழிப்புணர்வுக்காகவே போட்டி:


இதுகுறித்து பத்மராஜனிடம் கேட்டபோது, “தெலுங்கானா மாநிலம் ராஜ்ய சபை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தேன். இன்று வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. ஜனநாயக இந்தியாவில் யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 243 வேட்பு மனுக்களில் பலமுறை தன்னை நிராகரித்து உள்ளதாகவும், இருப்பினும் வேட்பு மனு தாக்கல் செய்வது எனது கடமை என்றார். மேலும், இதுவரை ஒருமுறைகூட தனக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டது இல்லை, இருப்பினும் மக்கள் எனக்காக வாக்களித்து கொண்டுதான் உள்ளனர் என நெகிழ்ச்சியுடன் கூறினார். ஜனநாயக இந்தியாவில் தேர்தலில் யார் வேண்டுமானாலும், யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற விழிப்புணர்வுக்காக மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்கிறேன் என்று கூறினார். இதுவரை தோல்விகளை மட்டுமே தனது அரசியல் வாழ்க்கையில் கண்ட பத்மராஜன், தேர்தல்களில் தோல்வி அடைவதை மட்டுமே தான் விரும்புகின்றேன்" என்று நிகழ்ச்சியுடன் கூறுகிறார்.