Election Commission: அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.


தேர்தல் ஆணையம் எச்சரிக்கை:


நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிய்னருக்கு சில அறிவுத்தல்களையும், எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, “ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பது அனைவரும் அறிந்திருப்பீர். இதை கருத்தில் கொண்டு,



  • அரசியல் கட்சிகள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

  • கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருதுவாராக்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்குள் சென்று தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது. மீறினால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

  • சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது என்றும், மத வழிபாடு அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது 

  • தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வகையில் பிரச்சாரத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்

  • பெண்களை கண்ணியம் குறைவாக பேசக் கூடாது

  • தனிநபர் தாக்குதல் மற்றும் ஒருவரின் பொதுவாழ்விற்கு தொடர்பில்லாத விவகாரங்கள் தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது

  • அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் வாக்காளர்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்றும், சமூக ஊடகங்களில் எதிர்கட்சியினரை அவமதிக்கும் வகையில், கண்ணியம் குறைவான பதிவுகளை வெளியிடக் கூடாது” என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதேபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், எந்தவித புதிய நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளையோ, அரசாணைகளையோ வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசுத்துறைகளின் செயலாளர்களுக்கு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளர்.


மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்:


கடந்த 2019ம் ஆண்டு தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் 10ம் தேதி அன்று தான் வெளியிடப்பட்டது. அதேபோன்று நடப்பாண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதிகளும், மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என்பது போன்ற பணிகள் பல்வேறு கட்சிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான், அரசியல் கட்சிகள் தேர்தல் நன்னடத்தைகளை பின்பற்ற வேண்டும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.