தேர்தலை ஜனநாயகத் திருவிழா என குறிப்பிடுவது வழக்கம். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் என்றால் ஒட்டுமொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுவிடும். தேர்தலை ஜனநாயகத்தின் அடையாளமாகக் குறிப்பிட்டாலும் இங்கும் வாரிசு அரசியலை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அப்படி இரண்டு முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசுகள் ஒரே தொகுதியில் எதிரெதிரே களமிறங்குகின்றனர். 


முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசுகள்


காங்கிரஸ் சார்பில் கீதா சிவராஜ் குமாரும் பாஜக சார்பில் ராகவேந்திராவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆமாம், கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா தொகுதியில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்களான சரெகொப்பா பங்காராப்பா மற்றும் எடியூரப்பாவின் வாரிசுகள் ஷிமோகா தொகுதியில் களமிறங்குகின்றனர். காங்கிரஸ் வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கார்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சரெகொப்பா பங்காராப்பாவின் மகளும் கர்நாடகா மாநில திரைத்துறையின் உச்சநட்சத்திரமாக உள்ள சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமார் போட்டியிடுகின்றார். பாஜக வெளியிட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 


 



எடியூரப்பா


ஷிமோகா யாருடைய கோட்டை? 


ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இருவரும் ஸ்டார் வேட்பாளர்கள் என்பதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக தற்போது உள்ள ராகவேந்திரா இதற்கு முன்னரும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுமட்டும் இல்லாமல் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எடியூரப்பா இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஷிமோகா தொகுதியில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொகுதி பாஜகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகின்றது. எடியூரப்பாவைப் பொறுத்தவரை 4 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்காக மேலாக முதலமைச்சராக இருந்தார். 


கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த கீதா சிவராஜ்குமாருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அப்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர், சரகோப்பா பங்காரப்பா. இவர் இந்த தொகுதியில் இவர் 1999இல் காங்கிரஸ் சார்பாகவும், 2004இல் பாஜக சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேநேரத்தில் 2005ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சரகோப்பா பங்காரப்பா 1990ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி முதல் 1992ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வரை முதலமைச்சராக பதவி வகித்தார். 


 



ராகுல் காந்தி


யாருக்கு வெற்றி அதிகம்? 


ஷிமோகா மக்களவைத் தேர்தியைப் பொறுத்தவரையில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பாஜகவின் கரங்கள் உயர்ந்ததாக இருந்தாலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடிவுகள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மொத்தத்தில் முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசுகள் நேரடியாக மோதிக்கொள்வதால் இந்த தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகியுள்ளது.