தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா இணைவாரா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலளித்தார். 

Continues below advertisement

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்தார். மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 

இதனைத் தொடர்ந்து நேற்று காலை திடீரென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று காலை சென்னை திரும்பும் முன் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கலந்து பேசினோம். இனி தேர்தலில் எவ்வாறு செயல்பட  வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம். சில கட்சிகளிடம் கூட்டணிக்கு வருமாறு பேசிக் கொண்டிருக்கிறோம். வருவதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். 

Continues below advertisement

சசிகலாவுக்கு கூட்டணியில் இடமா?

தொடர்ந்து புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, “நேற்று நடந்த கூட்டத்தில் இதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. கூட்டணியில் இணைவது பற்றியெல்லாம் சசிகலாவிடம் கேள்வி கேட்க வேண்டும்” என காட்டமாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். 

மேலும் எப்போதும் நிர்வாகிகள் பலருடன் வரும் நீங்கள் ஏன் தனியாக வந்தீர்கள் என்ற கேள்விக்கு, “மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அந்த கூட்டம் முடிந்ததும் என்னை டெல்லிக்கு வருமாறு அழைப்பு வந்தது. மற்றவர்கள் எல்லாரும் கூட்டம் முடிந்து வீடு திரும்பி விட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை சுமூகமான, எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. எதைப்பற்றியும் கவலை வேண்டாம். எங்களுக்குள் குழப்பமில்லை.

ஆனால் திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. அதில் காங்கிரஸ் இருக்குமா இல்லையா என்பதே தெரியவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். அதிமுக ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் மொத்தமாக 234 தொகுதிகளில் 70 தொகுதி வரை கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பெரும் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ளது.