அதிமுக அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று வேட்புமனுவை தாக்கல் செய்தபின் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Continues below advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

எடப்பாடியில் ஹாட்ரிக் வெற்றி

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி, 8-வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 1989-ம் ஆண்டு முதல்முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி இதுவரை 5 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக மூன்றுமுறை எடப்பாடி தொகுதியில், அவர் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

எடப்பாடி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தபின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேமுதிகவிற்கு அரை சதவீதம்தான் வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவிற்கு 2026 மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவதாக சொன்னேன். அதற்குள் அவர்கள் மனநிலை மற்றும் அணி மாறி விட்டார்கள். திமுக கூட்டணியை தாங்கி பிடித்த அவருக்கு கிடைத்த பரிசு.

உதயநிதி ஸ்டாலின் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி வருகிறார். அதில் மும்மொழி பாடமும் நடத்தப்படுகிறது. தங்களுக்கு தேவை என்றால் மட்டும் எந்த மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள். தமிழகத்தில் நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல். மக்களவை தேர்தல் அல்ல என முதலமைச்சர் புரிந்து கொண்டு பேச வேண்டும். ஒன்று, இரண்டு திட்டங்கள் விடுபட்டிருந்தால் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விடுபட்டது அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

15-ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நானும் பங்கு பெறுகிறேன். ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலை விட அமலாக்கத்துறை ஆதாரத்துடன் சட்டப்பேரவை, டிஜிபியிடம் அனுப்பிய ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர். அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ராசா மீது நடவடிக்கை எடுங்கள்

அதிமுக ஆட்சியில்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் அதிமுக பல்வேறு திட்டங்களை தந்த கட்சி. தற்போது மிகப்பெரிய வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆ.ராசா தொடர்பாக வெளியான ஆடியோ இந்திய அளவில் வைரலாகியது. கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாகவும், பட்டியல் இன மக்கள் பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும், ஆடியோவில் பேசப்பட்டிருந்தது. அதுகுறித்துதான் நான் கருத்து கூறினேன். ராசா மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு என் மீது பாய்வதில் என்ன இருக்கிறது.அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். அதிமுக அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று பேசினார்.