கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மக்களுக்கு திமுக அரசும் எதுவும் செய்யவில்லை என்று, சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டணி கட்சிகள் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
பாஜக போட்டியிடும் மயிலை தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கி இபிஎஸ் பேசுகையில், “210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சிகளை அழைத்தோம் பேசினோம், எத்தனை இடங்கள் என அறிவித்தோம், தேர்தல் அறிக்கையும் வெளியிட்டோம். தொகுதிகள் இறுதியாகாமல் திமுகவின் நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டோம். முழுமையான பட்டியல் மூன்று நாட்களில் வெளியிடப்படும். கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை” என்றார்.
மயிலாப்பூரில் தமிழிசை போட்டி?
இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வேனில் தமிழிசை செளந்தரராஜன் திடீரென தோன்றினார். அவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை போட்டியிட்டுகிறார் என்று கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. பாஜகவின் தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாகவே களத்தில் குதித்த தமிழிசைக்கு எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது அரசியலில் இதுவரை காணாத ஒரு அரிய நிகழ்வு நடந்ந்துள்ளது.
