சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடுமையான நிதி நெருக்கடியிலும் மிகப்பெரிய திட்டங்களை குறிப்பாக இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே பின்பற்றக்கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளும் பின்பற்றும் வகையிலும், இதுவரை யாருமே செய்திடாத வகையில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.



 


மேலும் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் ஜனநாயகம் என்பது தீவிர சிகிச்சை பிரிவில் சென்றுவிட்டதாகவும், பாஜகவை எதிர்ப்பவர்களை வருமான வரித்துறை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ற திரிசூலத்தின் மூலமாக பழிவாங்கி வருவதாக குற்றம் சாட்டிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வராத மோடி தற்போது தேர்தல் சமயத்தில் அடிக்கடி வருவது ஒரு ஏமாற்று வேலை என்றும் பாஜக மேடம் நடத்துகின்ற ரோடு ஷோ என்பது கொள்ளை அடிப்பதற்காகவே என்றும் குற்றம்சாட்டினார். அனைத்து வங்கிகளிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவதாகவும், ஊழலை ஒழித்து விடுவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த மோடி பெண்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தைக் கூட எடுத்துக்கொண்டு 29 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்திருப்பதாகவும் கூறிய அவர், மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் வராத மோடிக்கு தற்போது மக்கள் மீது அக்கறை வந்தது என்பது வெறும் நடிப்பு தான் என்று கருத்து தெரிவித்த திராவிட கழக தலைவர் வீரமணி ஜனநாயகம் காத்திட நல்லாட்சி மலர்ந்திட இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


கூட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.