சில நாட்களுக்கு முன்பு கந்தசஷ்டியை கருப்பர் கூடம் விமர்சித்த விவகாரத்திலேயே தனக்கு தி.மு.க., மீது மனநெருடல் ஏற்பட்டதாகவும் அதுவே நாளடைவில் அங்கிருந்து விலக காரணமானதாக புதிய காரணத்தை  அக்கட்சியிலிருந்து விலகி தற்போது பா.ஜ.க-வில் வேட்பாளராக இணைந்த டாக்டர். சரவணன் தெரிவித்தார்.


தி.மு.க.,வின் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் பா.ஜ.க.,வில் இணைந்து மதுரை வடக்கு சட்டமன்றத்திற்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கட்சியில் காலையில் இணைந்து மதியம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவரது வேட்பாளர் நியமனம் பல்வேறு விமர்சனத்திற்கு  உள்ளாகியிருக்கும் நிலையில் அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் டாக்டர் சரவணன். 


இரண்டு மாதத்திற்கு முன்பே பா.ஜ.க.,வில் இணைய பேசி வந்ததாக முன்பு கூறியிருந்த அவர், ‛கந்த சஷ்டி விவகாரத்தில் தனக்கு தி.மு.க., மீது மனநெருடல் ஏற்பட்டதாகவும், முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தான் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அது தனக்கு கவலையளித்ததாகவும், அது குறித்து கண்டனம் தெரிவிக்க திமுக தலைமைக்கு வலியுறுத்திதாகவும்,’ புதிய தகவலை தெரிவித்துள்ளார் டாக்டர் சரவணன். 


மதுரையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் தெரிவித்த கருத்துக்கள் இதோ:


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சமூக நீதி காப்பாற்றப்படும். திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அங்கு நான் தனித்துவத்தோடு செயல்பட முடியாத நிலை இருந்தது. சுயமரியாதை குறித்துப் பேசுகின்ற திமுகவில் அது இல்லை என்பதுதான் உண்மை. அதுகுறித்து திமுக தலைமையின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன்; விசாரிக்கிறேன் என்றார்கள் எதுவும் செய்யவில்லை.




கந்த சஷ்டியை  கருப்பர் கூடம் விமர்சித்த விவகாரத்தில், முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு தி.மு.க., மீது மனநெருடல் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் விரிந்து அக்கட்சியை விட்டு வெளியேற காரணம் ஆனது. அந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்க நான் தலைமைக்கு வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. எந்த ஊழல் குற்றச்சாட்டும் என்மீது விழுந்ததில்லை. ஆகையால் எனக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது அதனால் நான் பாஜகவோடு இணைந்து செயல்படுகிறேன், என்றார்.