DMK: கனிமொழிக்கு ப்ரமோஷன்? துரைமுருகனின் அதிகாரத்தை குறைக்க ஸ்டாலின் திட்டம்? - திமுகவில் மாற்றம்
TN Election 2026 DMK: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் அதிகாரத்தை குறைக்க, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Election 2026 DMK: சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தீவிரத்தில் திமுக:
மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஆளுங்கட்சியான திமுக, தேர்தல் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே வலுவான கூட்டணியை கட்டமைத்து இருந்தாலும், வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக தேமுதிகவையும் தங்களுடன் இணைத்துள்ளது. தொடர்ந்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், பொதுச்செயலாளர் துரைமுருகனின் அதிகாரத்தை குறைக்கவும், துணை பொதுச்செயலாளர்களாக உள்ள கனிமொழி உள்ளிட்டவர்களில் யாரேனும் ஒருவருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கவும், திமுக தலைவர் ஸ்டாலின் பரிசீலித்து வருகிறாராம். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் துரைமுருகன்..
திமுக மூத்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவரான துரைமுருகனை, வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் பொதுவெளியில் காண முடியவில்லை. இந்நிலையில் தான், கடந்த 11ம் தேதி வீட்டில் தவறி விழுந்தபோது ஏற்பட்ட காயம் மற்றும் கால் வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீராக இருந்தாலும், மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால், தேர்தல் பணிகளில் அவரால் பெரிய அளவில் பங்காற்ற முடியாது என கூறப்படுகிறது.
துரைமுருகனின் அதிகாரத்தை குறைக்க பரிசீலனை?
தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்த வாரம் தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. அதைதொடர்ந்து, திமுக வேட்பாளர்களையும் தேர்வு செய்ய உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக்குவதற்கான மனுவில் கையொப்பமிடுவது உள்ளிட்ட, பல்வேறு முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் அதிகாரம் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கே உள்ளது. ஆனால், வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்னையால் அவரால் இந்த பணிகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளார். இதனை கருத்தில் கொண்டே கட்சி விதிகளில் மாற்றம் செய்து, பொதுச்செயலாளரின் அதிகாரத்தை குறைக்க ஸ்டாலின் பரிசீலித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் களமிறங்குவாரா? என்பதும் சந்தேகமாகியுள்ளது.
கனிமொழிக்கு ஜாக்பாட்?
துரைமுருகனின் அதிகாரம் குறைக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதுமே, அந்த பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற பிரதான கேள்வியும் உடன்பிறப்புகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் தற்போது கனிமொழி, ஐ. பெரியசாமி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, பொன்முடி மற்றும் சாமிநாதன் ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ளனர். அவர்களில் யாரேனும் ஒருவருக்கே இந்த சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதிலும், ஸ்டாலினின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகவும் உள்ள கனிமொழிக்கே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும்போது வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.






















