2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதியில்கு ழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை மையப்படுத்தி திமுக தனது அதிரடி வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

Continues below advertisement

சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் குழு தயாரித்த தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கான உரிமைத் தொகை உயர்வு உள்ளிட்ட பல அம்சங்கள் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.  இதில் முக்கியமாக குழந்தைகளின் பாதுக்காப்பில் கவனம் செலுத்தும் வகையில் சிறப்பு வாக்குறுதிகள் இடம்பெற்றன

என்னென்ன வாக்குறுதிகள்:

1. பள்ளியில் இடைநிற்றல் இல்லா (Zero Dropout Tamil nadu) மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம்.2. குழந்தைகள் பாதுகாப்பிற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு குழந்தைநலத் தமிழ்நாடு உருவாக்கப்படும்.3. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துபவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரும் வகையில் போக்சோ நிதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.4. குழந்தைகள் பாதுகாப்புக்கான அனைத்து அமைப்புகளும் முழு அளவில் செயல்படுவது உறுதி செய்யப்படும்.5. அனைத்துக் குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம்.6. குழந்தைத் தொழிலாளர் அறவே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம்.7. குழந்தைகளுக்குப் பாலின நீதிக்கல்வி, குழந்தை உரிமைக்கல்வி, அரசமைப்பு பற்றி அறிமுகக் கல்வி போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.8. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்றிடும் வண்ணம் உரிய முறையில் வலுப்படுத்தப்படும்.9. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 செயல்பாடு உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும்.10. நாட்டிலேயே முதன்முறையாக, பெண்களைப் பாதிக்கும் கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு (Human papillomavirus-HPV) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியில், பெண்களைப் பாதிக்கும் கருப்பைவாய் புற்றுநோய் தமிழ்நாட்டில் அறவே அகற்றப்படும்.

Continues below advertisement