TN Election 2026: எந்த தொகுதி யாருக்கு? கலக்கத்தில் திமுக மா.செக்கள், நீளும் பட்டியல் - ஸ்டாலின் முடிவு என்ன?
TN Election 2026 DMK: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

TN Election 2026 DMK: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தல் பணிகள் மற்றும் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாம்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 6.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர்கள் தொகுதி அளவில் பயிற்சியாளர்களாக தொகுதிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மா.செக்கள் தீவிரம்..
திமுகவின் மிகப்பெரிய பலமாக அதன் கூட்டணி உள்ளது. அதன்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுபோக தற்போது புதியதாக தேமுதிகவும் இணைந்துள்ளது. ஏற்கனவே இருக்கும் கட்சிகளே கூடுதல் தொகுதிகளை கேட்க உள்ளாக கூறி வரும் நிலையில், தேமுதிகவின் வருகை தங்களுக்கான வாய்ப்பை பறித்துவிடுமோ என பலர் பதற்றத்தில் உள்ளனராம். இதனால், கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும், தங்களுக்கான தொகுதிகளில் கட்சி தலைமை கைவைத்து விடுமோ என திமுக மாவட்ட செயலாளர்கள் தவிப்பில் உள்ளதாக தெரிகிறது. எனவே, கட்சியை எந்த அளவிற்கு வலுப்படுத்தி உள்ளோம், அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் என்பன போன்ற தரவுகளை மாவட்ட செயலாளர்கள் தயார்படுத்தி வருகின்றனராம். தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எக்காரணத்தை கொண்டும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்பதை உறுதியாக தலைமைக்கு வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனராம்.
”தனிப்பெரும்பான்மையே இலக்கு”
கடந்த தேர்தலில் சிறிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் உதயசூரியன் சின்னத்திக்லேயே போட்டியிட செய்ததன் மூலம், திமுக மொத்தம் 173 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதேநிலையை இந்த தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் தலைமை நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளாராம். ஏற்ககனவே காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஒருவேளை தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டி இருந்தால், அது பெரும் தலைவலியாக மாறக்கூடும். எனவே, குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் போட்டியிட்டு, தனிப்பெரும்பான்மையை உறுதி செய்ய திமுக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.
தேமுதிகவிற்கு முக்கியத்துவம் ஏன்?
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சுமார் 40 தொகுதிகளில் வெறும் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டன. இந்த சூழலில் களமிறங்கியுள்ள விஜய் யாருடைய வாக்குகளை, எவ்வளவு பிரிப்பார் என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. எனவே சிறிய தவறு மூலம் பெரிய பின்னடைவை எதிர்கொள்ளக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே, வெறும் 0.4 சதவிகிதம் வாக்கு வங்கியை கொண்ட தேமுதிகவை கூட்டணிக்குள் திமுக இணைத்துள்ளதாம். வடமாவட்டங்களில் அந்த கட்சிக்கு உள்ள பரவலான வாக்குகள், தான் மீண்டும் ஆட்சி அமைக்க உதவிகரமாக இருக்கும் என ஸ்டாலின் நம்புகிறாராம்.






















