வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் என்பதால், சில வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிவர உள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 ஆவது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான உடன்படிக்கையில், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பரமசிவம் என்பவரும் கையெழுத்திட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரமசிவம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட பரமசிவம் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு பதிலாக, திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுகவினர் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென நிர்பந்தம் செய்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரபூர்வ சின்னம் இல்லாததால் அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பரமசிவம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கோரி, பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்ததால் திமுகவினர் போட்டி வேட்பாளரை களமிறக்கியுள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பரமசிவம் கூறுகையில், “திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே இட ஒதுக்கீடு உடன்படிக்கை போடப்பட்டது. அதன்படி 12 வது வார்டில் வேட்பாளராக கட்சி அறிவித்தது. இன்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுகவினர் நிர்பந்தம் செய்தனர். அதற்காக பணம் தருவதாக நிர்பந்தம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம் உள்ளது. அப்படி இருக்கும் போது அக்கட்சியின் தொண்டனான நான் உதயசூரியன் சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும்? திமுகவினரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் கூட்டணி தர்மத்தை மீறி உதயசூரியன் சின்னத்தில் அன்பரசன் என்பவரை திமுக போட்டியிட வைத்துள்ளது. இதற்காகவே அன்பரசனை முன் கூட்டியே வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், மக்களின் பிரச்சனைகளையும் தீர்க்கவும் குரல் கொடுத்து வருகிறேன். அதனால் நான் நகராட்சியில் கவுன்சிலராவதை திமுகவினர் விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. எம்.பி தேர்தல், எம்.எல்.ஏ தேர்தல்களில் வாக்கு சேகரிக்க மட்டும் கூட்டணிக் கட்சிகள் வேண்டுமாம். ஆனால் கூட்டணிக் கட்சிகள் அவர்களது சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பது என்ன நியாயம்? என்ன ஆனாலும் நான் சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன்” என அவர் தெரிவித்தார்.