கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று 17 இடங்களில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தனர். வாக்கு எண்ணிகை முடிவுகளின் போது கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதேபோல மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன. கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய 3 நகராட்சிகள் புதிதாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக நகராட்சி தேர்தலை சந்தித்தது. இதில் 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது. மொத்தம் உள்ள 198 இடங்களில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அதிமுக 23 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை.
கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் உள்ள 504 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 378 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதிமுக 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 27 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல பாஜக 5 இடங்களிலும், மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடஙகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகள் திமுக வசமானது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 15 இடங்களில் திமுக 5 இடங்களில் திமுக வென்ற நிலையில், 10 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சுயேச்சைகள் பேரூராட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல கோவை மாநகராட்சி பகுதிகளிலும் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கோவை மாநகராட்சியில் இதுவரை அறிவிக்கப்பட்ட 66 இடங்களில் 62 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 51 இடங்களை இதுவரை கைப்பற்றியுள்ளது. இதுவரை காங்கிரஸ் 5 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மை பலத்துடன் திமுக மாநகராட்சியை கைப்பற்றியது. அதிமுக இதுவரை 3 இடங்களிலும், சுயேச்சையாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
கோவை மாநகராட்சியில் இதுவரை திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த 2 தேர்தல்களிலும், மேயர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கே வழங்கியது. இந்நிலையில் இந்த தேர்தல் வெற்றி மூலம் கோவை மாநகராட்சியின் முதல் முறையாக திமுக மேயர் பதவியை கைப்பற்றுவதுடன், முதல் பெண் மேயராகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் திமுகவின் அபார வெற்றி, அக்கட்சியினர் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.