இறுதி கட்டத்தில் தேர்தல் பணி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கடந்த 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் திமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் குழப்பம்
ஆனால் இதற்கு அமைச்சர் காந்தி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் கடந்த 10 நாட்களாக எந்தவித பிரச்சாரத்தையும் ராணிப்பேட்டையில் திமுகவினர் தொடங்காமல் இருந்தனர். எனவே ராணிப்பேட்டை திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், வினோத் காந்தியை சந்தித்து பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தனது தந்தையும் மாவட்ட செயலாளருமான காந்தி ஒப்புதலை பெற்ற பிறகே பிரச்சாரத்தை தொடங்குவேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேர்தலில் தான் போட்டியிடவில்லையெனவும், தனது தந்தைக்கே அந்த வாய்ப்பை வழங்குவதாக வினோத் காந்தி கூறியுள்ளார்.
திடீர் திருப்பம் தந்த திமுக வேட்பாளர்
இது தொடர்பாக ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் வினோத் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
