சேலம் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


அப்போது பேசிய அவர், "கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் சென்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறேன். செல்லும் இடம் எல்லாம் மாபெரும் எழுச்சி உள்ளது. இதற்கு காரணம் திமுக, அதிமுக மீதான வெறுப்புதான். மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களிக்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி உருவாகும். இதற்கு முன்னோட்டமாகத் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பேரறிஞர் அண்ணாவை திமுகவும், அதிமுகவும் மறந்து விட்டனர். அவரின் கொள்கையையும் மறந்து விட்டனர். அதனால்தான் எங்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் அண்ணாதுரையை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சேலம் மாநகரில் 2 தலைமுறைகளை கடந்தும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவில்லை. குப்பை மேலாண்மை தெரியாததால் குப்பையை எரித்து வருகின்றனர். இதனால் புற்றுநோய் உருவாகும் என்கிற கவலையோ, அக்கறையோ திமுக அதிமுகவிற்கு கிடையாது. ஒவ்வொரு முறையும் சேலம் வந்தால் வீரபாண்டியார் ஞாபகம் வருகிறது. அவர் அவரது கட்சிக்காக மட்டுமல்ல சமுதாயத்திற்காகவும் பாடுபட்டுள்ளார். டாக்டர் ராமதாஸூடன் இணைந்து சமூக நீதிக்கான போராட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார். திமுக அவரை மறந்து விட்டது. ஆனால் நாங்கள் எப்போதும் மறந்து விடமாட்டோம். சேலம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம். அவர் முதலமைச்சராக இருந்தபோது எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், 2 மேம்பாலங்களை மட்டும்தான் கட்டினார். இந்த மேம்பாலங்களும் அடுத்த 10 ஆண்டுகளில் தேவையற்றதாகிவிடும். இடிக்க வேண்டி வரும். சேலத்திற்கு உள் மற்றும் வெளிவட்ட சாலைதான் தேவை. அதன்மூலம் மட்டுமே போக்குவரத்து சீராகும். அரைகுறையாக கட்டின மேம்பாலத்தை அதிமுகவினர் சாதனையாக பேசுகிறார்கள்.



சேலம் இரும்பாலைக்கு  4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் அரசால் அபகரிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதனை மீட்க பாடுபடுவோம். பனமரத்துப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தூர்வாரினால் ஒரு டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஒட்டுமொத்த சேலம் மாநகர மக்களுக்கு ஒரு வருடத்திற்கான தண்ணீர் தேவையை இந்த ஏரி பூர்த்தி செய்யும். இதற்காக பாமக தொடர்போராட்டங்களை நடத்திய பிறகு 96 கோடி நிதி ஒதுக்கீனார்கள். ஆனால் 6 கோடி செலவு செய்தபிறகு 90 கோடியை ஸ்வாகா செய்து விடுவார்கள். அதுதான் திமுக. அதிமுக நண்பர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். மாநிலத்திலும் அதிமுக ஆட்சியில்லை. ஜெயித்தாலும் பிரதமர் வேட்பாளர் கூட்டணியில் இல்லை. திமுகவை பழிதீர்க்க பாமகவிற்கு வாக்களியுங்கள். இப்போதுள்ள அரசியல் மிக மோசமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 32 வாக்குறுதிகளை சேலம் மாவட்டத்திற்கு கொடுத்த்தனர். ஆனால் ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. இதேபோன்று தமிழகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுக என்றாலே வாக்குறுதி மன்னர்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். எது சொன்னாலும் பொய்யைத்தான் சொல்வார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களிடம் திமுக ஆட்சிக்கு வந்த்தும் பழைய ஓய்வூதியத் திட்டம், பணி நிலைப்பு என வாக்குறுதிகளை அளித்தனர். 3 ஆண்டுகளாகியும் இதுவரை திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக தோல்வியடைந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒரு வாரத்திற்குள் ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து என எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதி என்றார். 57 வருடமாக ஆட்சி நடத்தியும் திமுக அதிமுகவினால், தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன் என ஒட்டுமொத்த குடும்பத்தையே மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கியதுதான் சாதனை. மதுப்பழக்கத்தை விட கொடியது போதைப் பொருள். தமிழகம் முழுவதும் தடையின்றி கிடைக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கையை வீணாகிவிட்டது. தெருத்தெருவாக, பள்ளிக்கூடம், கல்லூரிகளில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருள் எளிதாக கிடைக்கிறது. இதையெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.



மேட்டூர் உபரிநீர் திட்டம் வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகிறோம். 50 ஆயிரம் விவசாயிகளை வைத்து பாமக போராட்டம் நடத்திய பிறகு திமுக அதிமுக அரசுகள் மாறி மாறி வாக்கு கொடுத்தன. எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவருடைய ஊருக்கு மட்டும் தண்ணீர் எடுத்துப் போய்விட்டார். மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் என்பது கடலில் கலந்து வீணாகும் 600 டி.எம்.சியில் இருந்து வெறும் 5 டி.எம்.சியை கொண்டு, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதியை இணைப்பதுதான். இந்த திட்டம் நிறைவேற பாமகவிற்கு ஆதரவளிக்க வேண்டும். திமுக அதிமுகவால் தமிழகத்திற்கு எந்த பயனும், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தொலைநோக்கு சிந்தனை இல்லை. நிர்வாகம் செய்யாமல் வியாபாரம் செய்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் வியாபாரிகளாக உள்ளனர். மக்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். மொழியைப் பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் எங்கும் தமிழ் இல்லை. தாய்மொழியில் படிக்காமல் பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம்தான். பிரதமர் மோடி தமிழில் பேசுவது பெரிய முயற்சியாகத்தான் நான் பார்க்கிறேன். தமிழக மக்கள் திமுக அதிமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் திமுக, அதிமுக இல்லாத ஆட்சியை உருவாக்கி காட்டுகிறோம். ஆட்சிக்கு வந்தால் கல்வி முழுமையாக இலவசமாக வழங்கப்படும். சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு விஷயத்தில் திமுக, அதிமுக இருகட்சிகளும் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.  பாரதிய ஜனதாக் கட்சியில் யாராவது சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரி என சொல்லி இருக்கிறார்களா. உதயநிதி ஸ்டாலினுக்கும் சமூகநீதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா. அவருக்கும் சினிமாவுக்கும்தான் தொடர்பு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இன்னும் 1924-ம் ஆண்டிலேயே இருக்கிறார். அந்த காலத்தில்தான் ஆயிரம் ரூபாய் பெரிய விஷயம். இப்போது ஆயிரம் ரூபாய் காலையில் கொடுத்தால் மாலையில் அது எங்கே போகும் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று பேசினார்.