திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தற்போது எம்.பி. ஆக இருக்கும் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி, வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்க உள்ளது.
திமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தவிர, இதர கட்சிகளுக்கு, மக்களவைக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மாநிலங்களவை ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 19 தொகுதிகள் போக, மீதமுள்ள 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது.
இதில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சிட்டிங் எம்.பி.க்கள் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு வாய்ப்பு மறுப்பு?
- கவுதமசிகாமணி (கள்ளக்குறிச்சி)
- தனுஷ் குமார் (தென்காசி )
- செந்தில் குமார் (தர்மபுரி)
- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்)
- எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்)
- சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி)
இதில் திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் அந்தத் தொகுதி மலையரசன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க திமுக முடிவு
அதேபோல் தஞ்சையில் 6ஆவது முறை எம்.பி.யாக உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தஞ்சை தொகுதியில் முரசொலி என்பவர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 6 முறை எம்.பி.யாக இருந்தவரை விடுத்து, இளைஞர்களுக்கு குறிப்பாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க திமுக முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
தருமபுரி எம்.பி.யாக இருந்த செந்தில் குமாருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வழக்கறிஞர் மணி போட்டியிட உள்ளார். சேலம் எம்.பி.யாக இருக்கும் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு பதிலாக செல்வகணபதி போட்டியிடுகிறார்.
தென்காசி எம்.பி. தனுஷ்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மருத்துவர் ராணி என்னும் புதுமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஈஸ்வரசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்ற 2019 திமுக தொகுதிகள்
மயிலாடுதுறை, நெல்லை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள 4 எம்.பி.க்களுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.