ஒட்டுமொத்த நாடும் தற்போது காத்துக்கொண்டு இருப்பது இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலுக்காகத்தான். இந்த தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் பிடிக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்தாலும், தேசிய கட்சியாக உள்ள காங்கிரஸின் வியூகம் பாஜகவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.


2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸின் சில முடிவுகள் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவைத் தந்தது. அந்த படிப்பினையில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட காங்கிரஸ் இம்முறை நாடுமுழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் களம் காணவுள்ள கட்சிகளை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் ஒருங்கிணைத்துள்ளது. குறிப்பாக பிரதமர் பதவியைக் கூட விட்டுத்தரவும் ஆட்சியில் பங்கு அளிக்கவும் தயாராக உள்ளது.  இன்னும் இந்த கூட்டணிக்கு யார் தலைவர் என்ற முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், கூட்டணியில் உள்ள கட்சிகள் சிதறாமல் இருக்கவேண்டும் என்றால் அது காங்கிரஸின் முடிவுகளில்தான் உள்ளது. ஆனால் I.N.D.I.A கூட்டணியின் முகமாக ராகுல் காந்தி உள்ளார் என்பதையும் மறுக்கமுடியாது. தொகுதிப்பங்கீட்டைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாகவே முடிய அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக பாஜக ஒதுக்கும் தொகுதிகளை மறுப்பு தெரிவிக்காமல் பெற்றுக்கொண்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. 




I.N.D.I.A கூட்டணியில் தொகுதிப் பங்கீடு 


தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என மொத்தம் 28 கட்சிகள் கைகோர்த்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதில் நாடு முழுவதும் வாக்கு வங்கி உள்ள கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். இதனால் I.N.D.I.A கூட்டணியில் அதிக தொகுதிகளில் களமிறங்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், மாநில கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் விடாப்பிடியாக நின்றால் அது காங்கிரஸின் அரசியல் கணக்கில் சறுக்கலை ஏற்படுத்தும். இப்படியான நிலையில் காங்கிரஸ் கட்சி I.N.D.I.A கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜனவரி 14ஆம் தேதி தொடங்கவுள்ள ராகுல் காந்தியின் பாரத் நியாய் யாத்திரைக்கு முன்னதாக தொகுதிப் பங்கீட்டினை முடிக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக இருக்கின்றதாம். 


காங்கிரஸுக்கு உள்ள சிக்கல்


தொகுதிப் பங்கீட்டினைப் பொறுத்தவரையில், ஏற்கனவே கூட்டணித் தலைவர்கள் முடிவெடுத்ததைப் போல் மாநிலங்களில் மாநிலக்கட்சியின் தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் செயல்படவேண்டும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மேற்கு வங்கத்தினைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு வாக்கு வங்கியே இல்லை. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸின் ஓட்டு சதவீதமே 2.93% தான். இந்நிலையில் காங்கிரஸ் மேற்கு வங்கத்தினைப் பொறுத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தினைப் பொறுத்தவரையில் பாஜகவை வீழ்த்த பலமான வாக்கு வங்கி வைத்துள்ள கட்சி திரிணாமுல் காங்கிரஸ்தான் என I.N.D.I.A கூட்டணிக்குள் பேச்சுகள் அடிபடுகின்றது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாகவே 2 முதல் 4 தொகுதிகளில் போட்டியிடவே வாய்ப்புள்ளது. 


48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் இருந்தாலும், I.N.D.I.A கூட்டணி அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து சிவசேனா (யு.பி.டி) 23 தொகுதிகளில் போட்டியிடும் என ஏற்கனவே கூறி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சி சரத் பவாரின் மகா விகாஸ் அகாடிக்கும் இடங்களை ஒதுக்கவேண்டிய இடத்தில் இருப்பதால், காங்கிரஸ் 15 முதல் 18 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 




ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ள டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 20 மக்களவைத் தொகுதியில் ஒரு இடத்தைக் கூட காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என கூறப்படுகின்றது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள மற்ற மாநிலங்களில் (ஹரியானா மற்றும் குஜராத்) தொகுதிகள் வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்து பஞ்சாப் மற்றும் டெல்லியில் களமிறங்க முடிவு செய்துள்ளதாம். பாஜகவின் கோட்டையாக உள்ள குஜராத்தில் உள்ள 26 இடங்களில், ஆம் ஆத்மிக்கு 5 முதல் 6 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதமுள்ளதில் காங்கிரஸ் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.


பீகாரில் ஆளும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள பலமான கட்சியான ஜனதா தளமும் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிக அளவிற்கான தொகுதியில் களமிறங்க தீவிரமாக இருக்கும் என்பதால், காங்கிரஸ் இங்கு தனக்குள்ள 9 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்கு வங்கியைக் கணக்கில் காட்டி குறைந்த பட்சம் 8 தொகுதிகளிலாவது களமிறங்க முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தன்னைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என I.N.D.I.A கூட்டணிக்குள் தனக்கு நெருக்கமான கட்சிகளிடம் பேசி வருகின்றாராம். 




இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்திரபிரதேசத்தில் காங்கிரஸின் செல்வாக்கு என்பது மிகக் குறைவு என்றாலும், கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி அதிக தொகுதிகளில் களமிறங்க காங்கிரஸிடம் கேட்கவுள்ளதாம். காங்கிரஸ் மற்றும் சமாஜ் வாதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் பெரிய மாற்றத்தினை நிகழ்த்தாத காரணத்தால் இரு கட்சிகளும் இணைந்து உத்திரபிரதேசத்திற்கென தனி தேர்தல் திட்டத்தையே வகுக்கவுள்ளது. உத்திரபிரதேசத்தினைப் பொறுத்தவரையில் I.N.D.I.A கூட்டணிக்கு எதிரான கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்பதால் இந்த 80 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் சமாஜ் வாதி இணைந்து தங்களால் முடிந்த அளவிற்கு வெற்றிவாகை சூட பிரியங்கா மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையில் செயல்படவுள்ளதாம். 


தென் மாநிலங்கள் நிலவரம்


தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி என்பது வலுவாக உள்ளதால், இங்கு வெல்லும் தொகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பின்னர் கட்சி மாறமாட்டார்கள் என்பதால் காங்கிரஸ் இங்கு விட்டுக்கொடுத்துச் செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திமுகவுடன் முரண்டு பிடித்து அதிகப்படியான தொகுதிகளைக் கைப்பற்றவே முயலும். திமுக தரப்பில் தமிழ்நாட்டில் மட்டும் 9 தொகுதிகளுக்கு மேல் வழங்க தயாராக இல்லை என கூறப்படுகின்றது. பாண்டிச்சேரியுடன் இணைந்து மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்கவுள்ளதாம். கேரளாவைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் கடந்த முறை தனித்து நின்ற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கடைசி நேரத்தில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் இரு கட்சியும் தலா 10 தொகுதிகளில் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால் காங்கிரஸ் குறைந்தது 16 முதல் 18 தொகுதிகளில் களமிறங்கி 2 முதல் 4 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கலாம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் உள்ள வாங்கு வங்கி வித்தியாசம் என்பது 5 சதவீதம்தான். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 




தனித்து களமிறங்கும் காங்கிரஸ்


நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தேர்தலில் காங்கிரஸின் தோல்வி மக்களவைத் தொகுதி பங்கீட்டில் பெரும் பிரச்னை இருக்காது என்றாலும் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க I.N.D.I.A கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  


கர்நாடகம் -28, ஆந்திரா-25, தெலுங்கானா - 17, அருணாசல் பிரதேசம் - 2, அசாம் - 14, சதீஷ்கர் - 11, கோவா - 2, ஹரியானா - 10, ஹிமாச்சல் பிரதேசம் - 4, மத்திய பிரதேசம் - 29, மணிப்பூர் - 2, மேகாலயா - 2, ஒடிசா - 21, ராஜஸ்தான் - 25, திரிபுரா - 2, உத்தரகாண்ட் - 5 உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 199 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்தே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதில் ஹரியானா மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முரண்டு பிடித்தால், காங்கிரஸிடம் பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி தொகுதிகளை விட்டுக்கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு வரும். எனவே டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியிடையே இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளது. இது இல்லாமல் திரிபுராவில் இடது சாரிகள் களமிறங்க தொகுதி கேட்டால் காங்கிரஸ் ஒரு தொகுதியை அங்கு விட்டுத்தரவும் தயாராக உள்ளதாம்.  ஆந்திராவைப் பொறுத்தவரையில் ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரஸில் இணைந்துள்ளது, காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகின்றது. 


இது இல்லாமல் காங்கிரஸ் லடாக், சண்டிகர், அந்தமான் நிகோபார், தாத்ரா, நகர் ஹவேலி, டையூ டாமன் லட்சத்தீவுகள், நாகலந்து, மிசோரம், சிக்கிம் மற்றும் புதுச்சேரி போன்ற தலா ஒரு மக்களவைத் தொகுதிகள் கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 16 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே களமிறங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. 


நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 280 முதல் 300 தொகுதிகளில் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் I.N.D.I.A கூட்டணிக்குள் இருக்கும் மற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து 245 முதல் 265 தொகுதிகளில் களமிறங்க வாய்ப்புள்ளது.