காங்கிரஸ் கட்சி 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 39 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் கர்நாடகாவில் உள்ள ஷிவ்மோகா தொகுதியில் போட்டியிடுகின்றார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 




கீதா சிவராஜ்குமார் கடந்த ஆண்டு கர்நாடகா காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த முதற்கட்ட வேட்பாளர்களில் மொத்தம் 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், கர்நாடக மாநிலத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளா மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் மேகாலயாவுக்கு 2 தொகுதிகளுக்கும், சிக்கிம், நாகலாந்து லட்சத்தீவுகள் மற்றும் திரிபுரா ஆகியவற்றிகு தலா ஒரு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. அதாவது மொத்தம் 9 மாநிலங்களில் 39 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 


காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுயிலும் போட்டியிடுகின்றனர்.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கேரள மாநிலம் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.


சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல், சத்தீஸ்கரின் ராஜ்நந்காகோவன் தொகுதியில் போட்டியிடுகிறார். 


கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கேரள மாநிலம் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.


காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பொதுச் செயலாளர் கே.சி,வேணுகோபால் தெரிவித்ததாவது, ”தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க அதிகபட்ச தொகுதிகளை வெல்வதே எங்கள் முன்னுரிமை; காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்ச தொகுதிகளை வெல்வதே இலக்கு என தெரிவித்தார்”.


இந்நிலையில், கடந்த வாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக 195 தொகுதிக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் நரேந்திர வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 15 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள். பட்டியலின, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் 24 பேர். 50 வயதுக்கும் குறைவானவர்கள் 12 பேர். வயநாடு தொகுதியை பொறுத்தவரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அன்னி ராஜா களமிறங்குகிறார். இவர் வேறு யாரும் அல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜாவின் மனைவியே ஆவர்.


அதேபோல, திருவனந்தபுரத்தை பொறுத்தவரையில், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே வெற்றுபெற்று வருகிறது.