தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.


இதற்காக நேற்று சேலம் வந்த முதலமைச்சர் இன்று காலை முதல் அக்ரகாரம், பெரிய கடைவீதியில் நடைபயணம் மேற்கொண்டவாறு சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


Lok Sabha Election 2024: சேலத்தில் முதல்வர் ஸ்டாலின், கடைவீதியில் நடைபயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பு.


அப்போது கடை வியாபாரிகள் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், செல்வகணபதி நாடாளுமன்ற உறுப்பினரானதும் நிச்சயம் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என உறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் செல்வகணபதியுடன் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். முதலமைச்சர் வருகையையொட்டி அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.