ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜ்பவனில் இன்று எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன்பிறகு அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் தேநீர் விருந்து கொடுத்தார். இதையடுத்து, அனைவரும் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த விருந்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் குடித்தனர். இந்தப் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும்’ என்று குறிப்பிட்டனர். மேலும், தமிழ்நாட்டில் ஆரோக்கிய அரசியல் நடைபெற தொடங்கிவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.
பதவியேற்றுக் கொண்ட பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கண்கலங்கிய ஸ்டாலினை அவரது சகோதரி செல்வி ஆறுதல் படுத்தினார்.
இதையடுத்து, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார்.