சென்னை அடுத்துள்ள தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்.( 32). இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், உயர் பதவியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகராட்சியில் 25வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள், இவருடைய பிரச்சாரம் செய்யும் விதம் பிறரைக் காட்டிலும் வித்தியாசமாக உள்ளது, ஆம் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறி,  தனக்கு வாக்குகளை கேட்டு வருகிறார்.



பொதுவாக வேட்பாளர்கள் நாங்கள் ,இதை செய்வோம், அதை செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கும் நிலையில், மிகவும் எதார்த்தமாக தனது பகுதியில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் தேடி சென்று, நீங்கள் இப்படியே வாழ்ந்து பழகிவிட்டீர்கள் என்றால் எனக்கு வாக்கு அளிக்க வேண்டாம், இதிலிருந்து மாற்றம் வேண்டும் என்றால் எனக்கு  வாக்களியுங்கள் என வித்தியாசமான முறையில் வாக்குகளை கேட்டு வருகிறார். இவ்வாறு வித்யாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தினேஷிடம் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம், 

 


 

உங்களுடைய குடும்ப பின்னணி மற்றும் கல்வித் தகுதி என்ன ? 

 

நான் பத்தாம் வகுப்பில் 500க்கு 453 மதிப்பெண்களை பெற்று இருந்தேன். இதனையடுத்து டிப்ளமோ படித்து முடித்து, சென்னை குரோம்பேட்டை, எம்ஐடி இன்ஜினியரிங் முடித்தேன். 2014-ஆம் ஆண்டிலிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். சிறுவயது முதலே என்னுடைய அம்மா மட்டுமே என்னைப் படிக்க வைத்த ஆளாக்கினார். தந்தை இல்லாத காரணத்தினால் , 100 ரூபாய் வாடகை வீட்டில் நாங்கள் வசித்து வந்தோம், என்னுடைய கல்வி கொடுத்த வாய்ப்பின் காரணமாக இப்பொழுது, சொந்த அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வருகிறேன், இவை அனைத்திற்கும் என்னுடைய கல்வி மட்டுமே காரணம்.



அரசியல் மீது ஆர்வம் எப்படி வந்தது ?

 

சிறுவயதில் இருந்து ஐஏஎஸ் ஆகவேண்டும் என ஆசை இருந்தது, குடும்ப சூழல் உள்ளிட்டவை காரணமாக அப்போது கை கூடவில்லை, இதனால் அரசியலமைப்பில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் மீது ஆசை வந்தது. திராவிட மற்றும் தேசியம் ஆகிய சித்தாந்தங்கள் வேண்டும் என்று நினைப்பவன் நான், கொள்கையின் மீது பெரிய அளவில் நாட்டமில்லை. ஆனால் மக்கள் பிரச்சனை குறித்து நன்கு அறிந்தவன், கடை நிலையில் இருந்து முன்னேறி வந்தவன் என்பதால், நான் பட்ட கஷ்டத்தை வெகுஜன மக்களில் இருந்து வரும் சகோதர, சகோதரிகள் அனுபவிக்கக் கூடாது, ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றேன். 

 

வித்யாசமான முறை பிரச்சாரம் யோசனை எப்படி வந்தது ?

 

அந்த வீடியோவில் இருக்கும் எல்லா இடங்களும், தினம் தினம் நான் கடந்து போகும் பொழுது பார்க்கின்ற பிரச்சினைகள். இது குறித்து தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் என்னுடைய கட்சி நண்பரும் சேர்ந்து இந்த வீடியோவை எடுத்தோம், கைப்பேசியில்  வீடியோவை எடிட் செய்தோம் இதற்காக எந்தவித பொருட்செலவும் செய்யவில்லை.

 



மக்கள் நீதி மையத்தில் இணைந்தது எப்படி ?

 

ஆரம்பத்தில் இருந்தே அரசியல் மீது ஆர்வம் இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது ஈர்ப்பு இருந்தது. அவருடைய மறைவிற்கு பிறகு கமல் கட்சி தொடங்கினார். சுமார் ஒரு வருட காலம் மக்கள் நீதி மையத்தில் கண்காணித்து வந்தேன், அதற்குப்பின் மக்கள் நீதி மைய கட்சியில் இணைந்தேன். மக்கள் நீதி மையத்தில் செய்தி மற்றும் ஊடக பிரிவு மாநில இணைச் செயலராக இருந்து வருகிறேன்.

 

பொதுமக்களின் வரவேற்பு எப்படி உள்ளது ?

 

பெரும்பாலான இடங்களில் இளைஞர் ஒருவர் வாக்கு கேட்டு வருவதை பார்த்து இன்முகத்துடன் பொதுமக்கள் வரவேற்கின்றனர். சில பொதுமக்கள் மத்தியில் ஒருவர், மாநிலத்தில் ஒருவர் , என ஆட்சியில் இருக்கும் பொழுது புதியதாக நீங்கள் வந்து என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்த புரிதலை உருவாக்குகின்றோம்.



மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது ?

 

உள்ளாட்சி அமைப்புகளை  நேர்மையான அமைப்பாக மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம்தான் ஒரு நல்ல, நேர்மையான அரசை கட்டமைக்க முடியும். இந்த நாட்டின் குடிமகனாக நான் என்னுடைய கடமையை செய்து விட்டேன், இது எனக்கான வாய்ப்பு அல்ல , மக்களுக்கான வாய்ப்பு. நேர்மையான நிர்வாகத்தை உருவாக்க என்னை மக்கள் தேர்ந்தெடுப்பதும், தேர்ந்தெடுக்காமல் இருப்பதும் அவர்கள் கையிலேயே உள்ளது. நான் தாம்பரம் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், என்னுடைய குரல் ' பணிந்து ' இல்லாமல் மக்களுக்காக ' துணிந்து ' ஒலிக்கும் என நம்பிக்கை குரல்களில் பேசுகிறார் தினேஷ்.