களம் இறங்கிய வாரிசுகள் கச்சைக்கட்டும் மா.செக்கள்
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களாக உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் 90% இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. சென்னை மேயர் பொறுப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசின் அரசாணை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இருப்பினும் திமுகவின் முன்னணி தலைவர்களாக பொறுப்பு வகித்த வாரிசுகள் இத்தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் சென்னை திமுகவின் முகமாகவும் விளங்கிய முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி 99ஆவது வார்டிலும் மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், 141ஆவது வார்டிலும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
மேலும் மாவட்ட செயலாளருக்கு நிகரான மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பை வகிக்கும் இருவர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளது கவனம் பெற்றுள்ளது. சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இளைய அருணா 49ஆவது வார்டிலும், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலினின் தீவர ஆதரவாளராகவும் விளங்கும் சிற்றரசு 110ஆவது வார்டிலும் வேட்பாளராக போட்டி இடுகின்றனர்.
துணை மேயர் ஆகிறாரா சிற்றரசு?
சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பு பட்டியல் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் துணை மேயர் பொறுப்பு பொதுப்பிரிவை சேர்ந்த ஒருவருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சிற்றரசு, சென்னை மேற்கு மாவட்டத்தின் இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கட்சிகள் சார்பில் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது சென்னை மேயர் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என சிற்றரசு விருப்பமனு அளித்தது கட்சியினரின் மத்தியில் பெறும் கவனம் பெற்ற ஒன்றாக மாறியது. பின்னர் பல்வேறு காரணங்களால் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் இருந்த ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில் அவருக்கு பிறகு மாவட்ட செயலாளர் யார்? என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்த நிலையில் பல சீனியர்களின் பெயர்கள் அப்பதவிக்கு அடிபட்ட நிலையில் சிற்றரசு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர களப்பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் சென்னை துணை மேயர் பொறுப்புக்கு சிற்றரசை கொண்டவரவும், அவரேயே சென்னையில் நிழல் மேயராக அதிகாரம் செலுத்தவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு திமுக தலைமைக்கு விஸ்வாசமானவராக சிற்றரசு செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
திமுக சார்பில் யாருக்கு மேயர் வாய்ப்பு?
சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 16 வார்டுகளில் இருந்துதான் சென்னை மேயர் தேர்வு செய்யப்பட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேயர் தேர்வு என்பது இந்த முறை மறைமுகத் தேர்தலாக நடத்தப்படும் என்பதால் ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரே சென்னை மேயராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதன் படி சென்னையில் உள்ள 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 ஆகிய 16 வார்டுகளில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 31, 77 வார்டுகளில் காங்கிரஸும் 135ஆவது வார்டில் விடுதலைச் சிறுத்தைகளும் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளரை களம் இறக்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த வார்டுகளை தவிர்த்து மீதமுள்ள 13 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் திமுகவை சேர்ந்த ஒருவரே சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியல் இன பெண் மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டியல் இன பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 16 வார்டுகளில் வார்டு எண் 17-இல் திமுக சார்பில் கவிதா நாராயணன் என்ற பெண் வேட்பாளரும் களத்தில் உள்ளார். இவர் வெல்லும் பட்சத்தில் கவிதா நாராயணனும் மேயர் பொறுப்பிற்கு போட்டியிட தகுதி உள்ளவர் என கூறப்படுகிறது.
பட்டியல் இன பெண்கள் வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்:-
28 ஆவது வார்டு - கனிமொழி சுரேஷ் - மாதவரம்
46ஆவது வார்டு - சி.ஆனந்தி-பெரம்பூர்
47ஆவது வார்டு - ஈ.மணிமேகலை - பெரம்பூர்
52ஆவது வார்டு- எஸ்.கீதா - ராயபுரம்
53ஆவது வார்டு- பா.வேளாங்கண்ணி - ராயபுரம்
59ஆவது வார்டு-சரஸ்வதி-துறைமுகம்
70ஆவது வார்டு-சி.ஸ்ரீதணி - கொளத்தூர்
74ஆவது வார்டு - ஆர்.பிரியா - திருவிக நகர்
85ஆவது வார்டு- கே.பொற்கொடி - அம்பத்தூர்
111ஆவது வார்டு -நந்தினி - ஆயிரம் விளக்கு
120 ஆவது வார்டு- மங்கை ராஜ்குமார்- சேப்பாக்கம்
159ஆவது வார்டு - அமுத பிரியா - ஆலந்தூர்
196ஆவது வார்டு - விஜயலட்சுமி ஆனந்த் - சோழிங்கநல்லூர்