தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், சென்னை 141வது வார்டில் மறைந்த ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் வெற்றி பெற்றார். முன்னதாக, ஜெ. அன்பழகன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
சென்னை மாவட்ட செயலாளர், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் என கட்சியில் உயர்ந்தார். திமுக கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் பகுதியான T.நகர் தொகுதியில், கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், திமுக சார்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று 14 சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதே தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
ராஜா அன்பழகனின் தந்தை மறைந்த ஜெ.அன்பழகன் மற்றும் இவரது தாத்தா பழக்கடை ஜெயராமன் தி.மு.க. பகுதி செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 5.00 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும், திமுக நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்