Postal Vote Age: தேர்தலில் தபால் வாக்களிப்பதற்கான வயது 80 ஆக இருந்த நிலையில், தற்போது அது 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தபால் வாக்குக்கான வயது வரம்பு உயர்வு:


நாட்டில் இனி நடைபெற உள்ள மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே தபால் வாக்குகளை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இருந்த வரம்பான 80 வயது மற்றும் அதற்கு மேலானவர்கள் என்ற தகுதியை மத்திய அரசு திருத்தியுள்ளது.


வயது வரம்பில் மாற்றம்:


இதுதொடர்பான அரசு அறிவிப்பில்,” மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதிகள்-1961 இல் திருத்தம் செய்து, “80 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்றழைக்கப்படும் மூத்த குடிமக்களின் வரையறையை “80 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்பதில் இருந்து “85 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்று மாற்றியுள்ளது. இந்த முடிவு “இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக்குப் பிறகு” எடுக்கப்பட்டுள்ளது.  விதிகளின்படி, அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், கோவிட்-19 -பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அடங்கிய “அறிவிக்கப்பட்ட வாக்காளர் வகுப்பினர்” ​​தபால் வாக்குச் சீட்டு முறையில் வாக்களிக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உரிய முறையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஏன் இந்த மாற்றம்?


கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தல் முதல், மூத்த குடிமக்கள் மட்டுமின்றி மேல்குறிப்பிடப்பட்ட குறிப்பிட்ட தரப்பினருக்கு தபால் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது வரை 11 சட்டமன்ற / யூனியன் பிரதேச தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பான தரவுகளை ஆராய்ந்ததில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் பலரும் நேரில் சென்று தான் வாக்களிக்க விரும்புவது தெரிய வந்துள்ளது.  வெறும் 2 முதல் 3 சதவிகித மூத்த குடிமக்கள் மட்டுமே தபால் வாக்களிக்கும் முறையை பயன்படுத்துவதும் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தான், தற்போது தபால் வாக்களிக்க மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச வயது 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


1.75 கோடி மூத்த குடிமக்கள்:


நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.75 கோடி.  அவர்களில் 80-85 வயதுடையவர்கள் சுமார் 98 லட்சம் பேர். தகுதியான அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தேர்தல் ஆணையம் தபால் ஓட்டுகளை விநியோகிக்கிறது. இந்நிலையில், புதியதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின்படி, தேர்தல் அலுவலர்கள் இனி மீதமுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட 77 லட்சம் பேருக்கு மட்டுமே தபால் ஓட்டு முறையில் வாக்களிப்பதற்கான சீட்டுகளை விநியோகிக்கும். இந்த நடைமுறை வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.