வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 81 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கார்த்திகேயன் (31) என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று கார்த்திகேயன் தனது வேட்பு மனுவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாட்டு வண்டியில் கட்சியின் சக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துக்கும் வகையிலும், தனது பகுதியில் அதிகளவில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ததாக கார்த்திகேயன் தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை இறுதி நாள் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய குவிந்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை அதிமுக இதுவரை 93 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக தற்போது வரை 20 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேசமயம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் தொடர்பான விபரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகளை ஒதுக்கவும், 75 வார்டுகளில் திமுக நேரடியாக போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.