மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள 18வது மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தேர்தல் நாளை அதாவது ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக செய்து வருகின்றது.


நாளை வாக்குப்பதிவு:


தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்பாடுகளைச் செய்தாலும், மக்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு இலவசங்களை தன்னார்வ அமைப்புகளும், பல நிறுவனங்களும் சமீபகாலமாக அறிவித்து வருகிறார்கள். 


உதாரணமாக வாக்களித்து விட்டு கையில் வாக்களித்ததற்கான அடையாளமான மையினை காண்பித்தால், அவர்களுக்கு ரூபாய்10க்கு பிரியாணி வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை உணவகங்கள் தெரிவித்திருக்கின்றன.


இலவச பீர்:


ஆனால், இதோ போன்ற ஒரு அறிவிப்பை பெங்களூரில் உள்ள ஹடுபீசனஹள்ளியில் அமைந்துள்ள Deck of Brews என்ற பெயர் கொண்ட தனியார் மதுபானகூடம், 26ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்களித்துவிட்டு, 27ஆம் தேதி மதுபானக் கூடத்திற்கு வரும் முதல் 50 நபர்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த செய்தி தற்போது பெங்களூரு மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. 


உணவகங்களின் அதிரடி ஆஃபர்கள்


பெங்களூரு என்ருபதுருங்கா சாலையில் உள்ள நிசர்கா கிராண்ட் ஹோட்டலில் வாக்களித்துவிட்டு வாக்களித்ததற்கான அடையாளத்துடன் வரும் மக்களுக்கு, இலவசமாக கர்நாடகா ஸ்பெஷல் பென்னி காளி தோசை, நெய் லட்டு மற்றும் ஜூஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. 


அதேபோல் பெங்களூரில் உள்ள உடுப்பி ருச்சி கபெவில் வாக்களித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவமாக மாக்டைல் வழங்குவதாக அறிவித்துள்ளது. மால்குடி மைலாரி மனே எனும் உணவகம் மைலாரி தோசை மற்றும் பில்டர் காபி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஐயங்கார் ஃபிரஷ் பேக்கரி அன்றைய தினத்தில் வாக்களித்துவிட்டு வரும் அனைவருக்கும் தங்களிடத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. 


வொண்டர்லாவின் ஆஃபர் 


தேர்தல் தினத்தில் வாக்களித்துவிட்டு கையில் மையினைக் காட்டும் அனைவருக்கும் 15 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என பெங்களூரில் உள்ள வொண்டர்லா அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகை கட்டாயம் வாக்களித்தவர்களுக்கு மட்டும்தான் என வொண்டர்லா தெரிவித்துள்ளது.