பஞ்சாயத்து தேர்தல்கள் 2023க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஹவுராவில் உள்ள ஒரு குழுவினர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறி மேற்கு வங்க காவல்துறை லத்தி சார்ஜ் செய்த சம்பவம் வாக்கு எண்ணும் மையங்களை பரபரப்படைய செய்துள்ளது.
காவல்துறை லத்தி சார்ஜ்
பரபரப்பாக நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு பின்னர் வக்கு எண்ணிக்கையிலும் அதே போன்ற சம்பவங்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே பலப்படுத்தப்பட்டு இருந்தன. அதே போல, இன்று காலை ஹவுராவில் உள்ள ஒரு குழுவினர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்றதாக ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை அடக்க மேற்கு வங்க காவல்துறை லத்தி சார்ஜ் செய்துள்ளனர். இதற்கிடையில், ராய்கஞ்சில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அங்குள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களது தேர்தல் ஆணைய அடையாள அட்டைகளை எரித்தனர் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோதும் கொலை, வாக்குப்பெட்டி எரிப்பு, மோதல் சம்பவங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இதனால் வங்காள மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தியது.
வாக்குப்பதிவின்போதே கலவரம்
தலைமை அதிகாரியின் கையொப்பம் இல்லாத வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குச் சீட்டின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் தனிச்சிறப்பு அடையாளமான ரப்பர் முத்திரை ஆகியவை செல்லாதவையாகக் கருதப்படும், அவை செல்லுபடியாகாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. PTI வெளியிட்ட தகவல் படி, தேர்தல் தொடர்பான வன்முறைகளில் கிட்டத்தட்ட 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வன்முறையில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக வங்காள ஆளுநர் சிவி ஆனந்த போஸ் இன்று காலை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்
ஆளுநர் போஸ் பேசுகையில், "வங்காளத்தில் பெருகிவரும் வன்முறைக்கு எதிராக இடைவிடாத போராட்டம் நடைபெறும். களத்தில் வன்முறை செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். குண்டர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது அனைத்து அதிகாரிகளும் கடுமையாக செயல்படுவார்கள்," என்றார். ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்தில் உள்ள 73,887 இடங்களுக்கு மாநிலத்தின் 22 மாவட்டங்களில் உள்ள 339 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 2.06 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் வாக்குப்பதிவு
"காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது, மேலும் இரண்டு நாட்களுக்கு இந்த வாக்கு எண்ணிக்கை தொடரும். அனைத்து வாக்குச்சீட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் தொகுக்க நேரம் எடுக்கும். முதல் நாளின் இறுதிக்குள் ஓரளவு முடிவுகள் தெரியவரும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று SEC அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அனைத்து வாக்கு எண்ணும் இடங்களிலும் ஆயுதம் ஏந்திய மாநில காவல்துறையினரும், மத்தியப் படைகளின் குழுவும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது. எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்க, CrPC இன் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.