ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா மறைமுகமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை தாக்கி பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது, 


இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 5 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் 26 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி இரண்டு கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இப்படியான நிலையில் மக்களவை தேர்தலோடு ஒடிசா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. 


இதனால் ஒடிசாவில் அனைத்து கட்சியினரும் முகாமிட்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் பாஜகவின் பேச்சு முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியனை மையப்படுத்தி இருப்பது பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. ஒடிசாவில் ஆளும் கட்சியான நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய பொறுப்பில் வி.கே.பாண்டியன் உள்ளார்.


பிரதமர் மோடி நேற்று முன்தினம் பரப்புரையின் போது, தொலைந்து போன பூரி ஜெகன்நாதர் கோயில் சாவிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்ற ரீதியில் வி.கே.பாண்டியனை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பலரும் பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.


இதுதொடர்பாக பதிலளித்த வி.கே.பாண்டியன் 40 ஆண்டுகளாக ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை திறக்கப்படாத நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்றம் ஆய்வு செய்ய உத்தரவிட்ட பிறகு தான் சாவிகள் காணாமல் போனது தெரிய வந்தது. இப்போது சாவிகள் குறித்து பிரதமர் மோடி முடிந்தால் அதனை கண்டிபிடித்து தரட்டும் என பதிலடி கொடுத்திருந்தார்.  


இந்நிலையில் நேற்று பரப்புரையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தற்போதைய தேர்தல்கள் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்கவும், ஒடிசாவின் பெருமையை மீட்டெடுக்கவும் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் ஒடிசாவை தமிழன் ஆளலாமா?. மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் ஒடிசா மண்ணின் மைந்தன் தான் இங்கு ஆள்வான் எனவும் அமித்ஷா கூறினார். இங்குள்ள அதிகாரிகள் ஒடிசாவின் கனிம வளங்களை கொள்ளையடித்துள்ளனர். பாஜக ஆட்சி அமையும்போது அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 


நவீன் பட்நாயக் ஆட்சியின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் சிதைக்கப்பட்டுவிட்டது எனவும், பாஜக மீண்டும் அதனை கொண்டு வரும்” எனவும் அமித்ஷா கூறினார்.