2019 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1% கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. இதுவே அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயரவில்லை, குறைந்திருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அடுத்த ஓமலூரில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “2019 தேர்தலில் பல கட்சிகளின் கூட்டணியோடு பாஜக பெற்ற வாக்கை விட 2024ல் குறைவாகவே உள்ளது. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது திமுகவின் வாக்கு சதவிகிதமும் குறைந்திருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அதிமுக தேர்தலை சந்தித்து கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. 2019 தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 33.52. % வாக்குகள் பெற்றனர் தற்போது 26.93% ஆக குறைந்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்குகளும் 6.32 % குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிமுகதான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததை பற்றி பேசக்கூடாது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பதுதான் கட்சிகளின் நிலைப்பாடு அது பின்னடைவு ஆகாது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. மக்களவை தேர்தல் என்பதால் மக்கள் வேறுவிதமாக வாக்களித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வந்தால் எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள்.” என தெரிவித்தார்.
2026ல் அதிமுக ஆட்சி:
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “2026ல் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையோடு வென்று ஆட்சியமைக்கும். தமிழ்நாட்டில் இருப்பதுபோல் பாஜக நிர்வாகிகள் பல மாநிலங்களில் இருப்பதால் பின்னடைவு என நினைக்கிறேன். தேசிய கட்சிகள் வெற்றிபெறும் வரை பயன்படுத்துகின்றனர். அதன்பின் நம்மை கண்டுகொள்வதில்லை. ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால் தேசியக் கட்சிகளோடு என்றோ கூட்டணி வைத்திருப்போம்.
பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். அதிமுக சார்பில் நான் ஒருவன் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தேன். பிரதமரின் ரோடு ஷோ மற்றும் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் தமிழகத்தில் பரப்புரை செய்தனர். திமுகவில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பரப்புரை மேற்கொண்டனர். இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்காக ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பரப்புரை செய்தனர். அதிமுக சார்பில் நானும், தேமுதிக சார்பில் பிரேமலாதாவும் பரப்புரை செய்தோம்.
அண்ணாமலையின் கனவு பலிக்காததால் விமர்சனம்:
தேர்தலுக்கு முன் அண்ணாமலை பல்வேறு கனவுகளை கொண்டிருந்தார். அவரது கனவு பலிக்காத்தால் விரக்தியில் கடுமையாக விமர்சிக்கிறார். கோவையில் கடந்தமுறை பாஜக பெற்ற வாக்குகளை விட அண்ணமலை குறைந்த வாக்குகளை பெற்றார். அதிமுகவை அழித்துவிடுவோம் என ரொம்ப காலமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள். ” என்றார்.