PM Modi: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அடுத்த 10 நாட்களில், 29 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
பிரதமரின் சூறாவளிப் பயணம்:
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேதி, இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) தொடங்கி, அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அரசு தரப்பிலான தகவல்களின்படி, தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு-காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த 10 நாட்களில் மோடி பயணம் மேற்கொள்கிறார். வாக்காளர்களை கவரும் நோக்கில் பிரதமர் மோடி இந்த சூறாவளி பயணத்தை மேற்கொள்கிறார். முன்னதாக வெளியான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் பயண விவரம்:
மார்ச் 4: முதல் நாளான இன்று மோடி தெலுங்கானாவுக்குச் செல்கிறார். அங்கு அடிலாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் அவர் தமிழ்நாட்டின் கல்பாக்கத்திற்குச் செல்கிறார். இறுதியாக சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர், மோடி ஐதராபாத் புறப்பட்டுச் செல்கிறார்.
மார்ச் 5: தெலங்கானாவின் சங்கரெட்டியில் பல திட்டங்களைத் தொடக்கி வைத்து உரையாற்றுவார். பின்னர் அவர் ஒடிசாவுக்குச் செல்கிறார், அங்கு சண்டிகோலேயில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதோடு, பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அன்று மாலையே மோடி மேற்கு வங்கம் செல்கிறார்.
மார்ச் 6: புதன்கிழமை, மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி இருப்பார். கொல்கத்தாவின் பராசத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஹவுரா மைதானம்- எஸ்பிளனேட் மெட்ரோ திட்டம் உள்ளிட்ட ரூ.15,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, தொடங்கி வைப்பது தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து பீகார் செல்லும் பிரதமர் மோடி பெட்டியா பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ. 12,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைக்கிறார்.
மார்ச் 7: மோடி தனது பயணத்தின் 4 ஆம் நாளில், ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். 2019 ஆகஸ்டில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இருப்பினும், கடந்த மாதம் ஜம்முவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கிவைக்கச் சென்றிருந்தார். பின்னர் அவர் டெல்லியில் நடைபெறும் ஊடக நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
மார்ச் 8: 5 ஆம் நாள், டெல்லியில் நடக்கும் முதல் தேசிய படைப்பாளி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மாலையில் அசாம் செல்கிறார்.
மார்ச் 9: சனிக்கிழமையன்று, பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் மேற்கு கமெங்கில் சேலா சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கிறார், அதைத் தொடர்ந்து தலைநகர் இட்டாநகரில் பல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர், அசாமிற்குச் செல்கிறார். அங்கு ஜோர்ஹாட்டில் லச்சித் பர்புகானின் சிலையைத் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகலில், மேற்கு வங்காளத்திற்குச் சென்று சிலிகுரியில் பல வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம், அர்ப்பணிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மார்ச் 10: ஞாயிற்றுக்கிழமை, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான அசம்கரில் பல நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மார்ச் 11: 8 ஆம் நாள், பிரதமர் மோடி 'நமோ ட்ரோன் திதி' மற்றும் 'லக்பதி திதி' நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தேசிய தலைநகர் செல்கிறார். பின்னர், துவாரகா எக்ஸ்பிரஸ்வேயின் ஹரியானா பகுதியை திறந்து வைக்கிறார், மாலையில் டிஆர்டிஓ நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
மார்ச் 12: 9 ஆம் நாள், பிரதமர் மோடி குஜராத்தின் சபர்மதிக்குச் செல்கிறார், பின்னர் ராஜஸ்தானுக்குச் செல்கிறார். அங்கு ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
மார்ச் 13: தனது பயணத்தின் கடைசி நாளில், பிரதமர் மோடி குஜராத் மற்றும் அசாமில் மூன்று குறைக்கடத்தி திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
பாஜகவின் ஒற்றை முகமான பாஜக:
பிரதமர் மோடி தனது இந்த சூறாவளி சுற்றுப்பயணத்தில், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை வெளியிட உள்ளர். கடந்த இரண்டு தேர்தல்களை போல, இந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் பிரதமர் மோடியை மட்டுமே முன்னிலைப்படுத்தி, தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே பிரதமரின் இந்த 10 நாள் பயணமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு, பிரதமர் மோடி நாடு முழுவதும் பயணித்து பரப்புரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.