ஆதவ் அர்ஜூனாவின் நோக்கம் 


விசிகவில் இருந்து கொண்டே திமுகவுக்கு எதிராக பேசிவந்த ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து அதிரடி காட்டினார் விசிக தலைவர் திருமாவளவன். அதன்பிறகு தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார் ஆதவ். அவர் தவெகவில் சேரப் போகிறார், விஜய்காக வேலை பார்க்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அவர் அமைதியாக அதிமுகவுக்கு வேலை பார்க்க ஆரம்பித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அதுவும் அதிமுக பொதுக்குழு முடிந்த அன்றே கட்சியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆதவ். அதிமுக-விசிக-தவெக கூட்டணி வைத்தால் என்ன தப்பு என்றும் பேசியுள்ளதாக தகவல். இதையெல்லாம் கேட்ட திருமாவளவன் ஆதவ் அர்ஜூனா ஏதோ உள்நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்று வெளிப்படையாகவே சொன்னார். 


தேர்தல் வியூகங்கள் 


2021 தேர்தலில் ஆதவ் திமுகவிற்காக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தது அதிமுக பக்கம் அவர் செல்வதற்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளதாக சொல்கின்றனர். திமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்கு பிரசாந்த் கிஷோரை நான் தான் அழைத்து வந்து தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தேன் என்ற கருத்துகளை ஆதவ் தற்போது அடிக்கடி சொல்வதை பார்க்க முடிகிறது. இதே மாதிரி அதிமுகவிற்காக வேலை பார்க்கவும் நான் பிரசாந்த் கிஷோரை அழைத்து வருகிறேன், அதே போல் 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைவதற்கும் ஏற்பாடு செய்கிறேன் என இபிஎஸ் உடன் பேசியதாக சொல்கின்றனர். ஏற்கனவே தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவை மீட்டெடுக்க ஆதவ்-ஐ உறுதியாக  பிடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இபிஎஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.


2026 தேர்தல்


அந்த நம்பிக்கையில் தான் 2026 தேர்தலில் நாம் ஆட்சியமைப்போம், தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும் என அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேசியுள்ளார். அதேபோல் ஜனவரி மாதம் இறுதியில் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார் இபிஎஸ். அதற்கு பின்னணியிலும் ஆதவின் திட்டம்  இருப்பதாக கூறப்படுகிறது. நமக்கு நாமே திட்டம், திமுகவுக்கு எப்படி திருப்பு முனையாக அமைந்ததோ அதே  போல் இபிஎஸ்-ஐயும் அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்குமாறு ஆதவ் யோசனை கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜியும் பேட்டி ஒன்றில், ஆதவ் இபிஎஸ் உடன்  பேச்சுவார்த்தை நடத்திய  பிறகுதான் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை முற்றுகையிட்டு  பேசினார் என நான் சொல்லட்டுமா என போகிற போக்கில் சொல்லியுள்ளார்.


இன்னும் சில நாட்களில் ஆதவ் அதிமுகவுடன் சேர்வது அதிகாரப்பூர்வமாகவே தெரியவரலாம் என்றும், அதிமுகவின் தேர்தல் வியூகங்கள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.