மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக கோவையில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் கோவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், இன்று காந்தி மாநகர், கணபதி மாநகர், மணியகாரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர் உடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பேருந்து பயணம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்களையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் கூறி கணபதி ராஜ்குமார் மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். 


இதனிடையே கோவை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.


கேள்வி : அதிமுக பலம் வாய்ந்த பகுதியாக கருதப்படும் கோவையில், திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?


பதில் : ”அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் ரொம்ப பலம் வாய்ந்த பகுதி என சொல்ல முடியாது. எங்களுக்கு போகும் இடங்கள் எல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. இது எங்களுக்கான வெற்றியை பாறைசாற்றி கொண்டிருக்கிறது”


கேள்வி : திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்?


பதில் : ”கடந்த 10 வருடங்களில் அதிமுகவினர் என்ன செய்தார்கள்? அவசர கோலத்தில் பாலங்கள் கட்டினார்கள். எதுவும் சரியான முறையில் செய்யவில்லை. கோவை - சக்தி சாலை விரிவாக்கத்தை அதிமுக ஆட்சியில் வேண்டுமென்றே நிறுத்தி வைத்தார்கள். ஆனால் முதலமைச்சர் நிதி ஒதுக்கி பணிகளை துவக்க உத்தரவிட்டுள்ளார். நிதி சிக்கல் இருக்கும் போதும், பல சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது முதலமைச்சர் மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். கண்டிப்பாக அத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்”




கேள்வி : திமுக வேட்பாளராக கோவை தொகுதி மக்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?


பதில் : ”கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், கோவை ரயில் நிலையம் மேம்பாடு, ரயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்”


கேள்வி : கோவையில் 60 சதவீத வாக்குகளை பெறுவேன் என பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”அது அவரது கனவு. நடைமுறையில் அது வராது”


கேள்வி : நீங்கள் பலவீனமான வேட்பாளர் என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குற்றம்சாட்டி வருகிறாரே?


பதில் : ”சிங்கை ராமச்சந்திரன் யார் என்றே அதிமுகவினருக்கே தெரியாது. நான் 3 முறை மாமன்ற உறுப்பினராகவும், மேயராகவும் இருந்துள்ளேன். அனைத்து மக்களுக்கும் நான் பரிட்சயமானவன். எல்லா தேர்தலையும் பார்த்துள்ளேன். மக்களின் தேவையறிந்து செயல்படுவேன்”


கேள்வி : உங்களுக்கு யாருடன் போட்டி இருக்கும் என நினைக்கிறீர்கள்?


பதில் : ”அதிமுக, பாஜக இருவருடனும் தான் போட்டி. அதிமுக, பாஜக இருவரும் ஒன்று தான். பாஜகவின் பி டீம் அதிமுக”