இளம் வயதில் அரசியலில் நுழைந்து இன்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார் மமதா பானர்ஜி. ஒற்றைக்காலால் உதைத்துதள்ளிய மமதா என சோஷியல் மீடியாக்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றன என்றால் அது வெறுமனே புகழ்ச்சி மட்டுமல்ல. அதற்காக உழைப்பை அவர் இந்த தேர்தலில் கொடுத்திருக்கிறார். எப்படியாவது காலூன்றிவிட வேண்டுமென குறி வைத்து அரசியல் காய்களை நகர்த்திய பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக நின்றார் மமதா. அந்த உழைப்பு இன்று அவருக்கு வரலாற்று வெற்றியை கொடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு ஏற்பட்ட நிகழ்வு அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்தது. ஒற்றைக்காலால் நான் பாஜகவை உதைத்துத் தள்ளுவேன் என்று உணர்ச்சிப் பொங்க பேசிய மமதா அதனை நடத்தியும் காட்டினார். மமதா ஜெயிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கவில்லை. அவர் ஒற்றைக்காலில் நின்றே ஜெயித்துவிட்டார் என ஃபயர் விடுகின்றனர் சோஷியல் மீடியா மக்கள்.
பழங்குடியினர், பெண்கள், பட்டியலினத்தவர்கள் என மமதாவின் அணி இந்தியாவுக்கே பாடம் சொல்லிக்கொடுக்கிறது என்றால் அது மிகையில்லை. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல மமதா என்பது அவர் அரசியல் வரலாறு சொல்லும். தன்னுடைய 15 வயதில் காங்கிரஸில் இணைந்து அரசியலில் கால் பதித்தார் மமதா. சிறு வயதில் வறுமை துரத்தினாலும் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் அவர் இல்லாமல் இல்லை.
அறிவுக்கும் தைரியத்துக்கும் விவேகானந்தரையும், நேதாஜியையும் துணைக்கு அழைத்துக்கொண்டார். வரலாறு படித்து சட்டம் முடித்தார். அடுத்தடுத்து அரசியல் வளர்ச்சி அவரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக ஆக்கியது. 1984ல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து இளம் வயதிலேயே நாடாளுமன்ற வளாகத்திற்குள் காலடி வைத்தார். பின்னர் வீசிய காங்கிரஸுக்கு எதிரான எதிர்ப்பு அலையில் மமதாவும் சிக்கினார். முடிவு 1989 தேர்தலில் தோல்வியாக அமைந்தது.
விட்டுவிடாத மனம், போராடும் குணம் அவரை மேலும் உந்தித் தள்ளியது 1991முதல் கொல்கத்தாவின் மேற்கு தொகுதியை தன்னுடைய கோட்டையாக மாற்றினார். அடுத்தடுத்து ஏற்பட்டது மமதாவின் அரசியல் ட்விஸ்ட்கள். உட்கட்சி பூசலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வீசப்பட்டார் மமதா. வீசப்பட்ட தான் ஒரு விதையென சொல்லாமல் சொல்லியது அவரின் வளர்ச்சி. தான் வெளியேற்றப்பட்ட அடுத்த ஆண்டே திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி அதிர வைத்தார். கட்சி தொடங்கிய அதே ஆண்டில் நேரடி எதிர்க்கட்சியாக அமர்ந்து அசர வைத்தார். மேற்கு வங்கத்தின் பிரதான கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியது. அந்த இடங்களை எல்லாம் பூர்த்தி செய்து ஸ்கோர் செய்த மமதா, மார்க்சிஸ்ட் கோட்டையான மேற்கு வங்கத்தில் 2011ம் ஆண்டு தன் கொடியை பறக்கவிட்டார். அன்று முதல் மேற்கு வங்கத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் மமதா. வடக்குப்பகுதியில் தன் ஆட்சியை முத்திரை பதிக்கும் பாஜக எப்படியாவது மேற்கு வங்கத்தில் காலூன்ற வேண்டுமென திட்டமிட்டது. பாஜவின் திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி இன்று வெற்றி வாகை சூடியிருக்கிறது மமதாவின் அணி.