2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ தேர்தல் பரப்புரை பாடலானது வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

2026 சட்டமன்ற தேர்தல்

2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை கள நிலவரம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளோடு இந்த முறை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுவதால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் எப்போது தேர்தல் என ஆவலோடு காத்திருக்கிறது. இப்படியான நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியை கடந்த ஓராண்டாக தொடங்கி நடத்தி வருகிறது. 

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால் மிக தீவிரமாக ஒவ்வொரு கட்சியிலும் தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை பம்பரமாக சுழன்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில் அதிலிருந்து சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. 

Continues below advertisement

சாதனை படைக்க தயாராகும் திமுக

இந்த நிலையில் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. முதல்முறையாக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மாணவர்கள் தொடங்கி மகளிர் வரை எண்ணற்ற திட்டங்கள் திமுக அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக துறை சார்ந்த அறிவிப்புகளும், திட்டங்களும் நடைமுறைக்கு வந்த வண்ணம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நிலுவையில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

திமுக இதுவரை தொடர்ச்சியாக 2 முறை ஆட்சியை பிடித்ததாக வரலாறு கிடையாது. அந்த சாதனையை நிகழ்த்த முதலமைச்சர் ஸ்டாலின் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். திராவிட மாடல் 2.0 நிச்சயம் மலரும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

தேர்தல் பரப்புரை பாடல்

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் பரப்புரை பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ரௌத்திரம் தான்.. சௌத் சைடு இந்தியா பார்.. ஜாக்கிரத தப்பாக தொட்டாக்கா வார்.. தாடி கிழவன் ப்ளட்டு.. அறிஞர் அண்ணா ப்ளட்டு.. தலைவர் கலைஞர் ப்ளட்டு.. 

பூமிக்கு வெளிச்சம் தந்த சூரியனே.. மெரண்டு கிடந்த நெஞ்சுக்குள்ள தைரியம் தந்த திராவிடனே.. மீண்டும் வா தலைவனே.. வென்று வா ஸ்டாலினே.. ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" ஆகிய வரிகள் இடம் பெற்றுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் “ஸ்டாலின் தான் வர்றாரு.. விடியல் தர போறாரு” என்ற பாடல் வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.