திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் சங்கராபுரம் உதயசூரியன் ஆகியோர் இன்னும் 2 மாதத்தில் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு உங்களது வாக்குகளை வீணாக்காதீர் என்று அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் செழியனை ஆதரித்து, அன்புமணி மணலூர்பேட்டையில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
’’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்குக் காரணம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள். நான் அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மீது வழக்கு தொடர்ந்தேன்.
பாமக வழக்கறிஞரை வைத்து சிபிஐ விசாரணை வேண்டும் என வழக்கு தொடர்ந்தோம். சென்னை உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் மீது சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைக்கு செல்லும் 2 எம்எல்ஏக்கள்
இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னும் இரண்டு மாதத்தில் இவர்கள் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள்.
திமுகவினர் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் உங்களது வாக்குகளை வீணாக்காதீர்கள். அவர்கள் 67 பேரை கொலை செய்து இருக்கிறார்கள். அதனால் ஜெயிலுக்கு செல்வது உறுதி.. திமுகவினர் இவர்களுக்கு உங்களது ஓட்டுக்களை போட்டு, உங்களது வாக்குகளை வீணாக்காதீர்.
விவசாய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு
அடுத்ததாக அமைய உள்ள அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கான பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 3500 ஆக நிர்ணயம் செய்யப்படும். கரும்புக்கு 5000 ரூபாய் அளிக்கப்படும்’’.
இவ்வாறு அன்புமணி பேசினார்.
