அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை மாறி கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இருந்த போதிலும் ஆரம்ப காலம் தொட்டே மகளிருக்கான வாய்ப்புகள் மிக எளிதாக கிடைப்பதில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் விடாமுயற்சியுடன் மகளிர் மேற்கொண்ட போராட்டங்களே அவர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுத் தந்திருக்கின்றன. இன்றிருப்பதைப் போல உயர் கல்வி கற்கும் வாய்ப்பு 30 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பெண்களுக்கு கிடைக்கவில்லை. இளம் வயது திருமணம், குடும்ப பொருளாதாரம் என ஒவ்வொரு குடும்பத்திலும் நிலவிய சூழல் காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாதவர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களின் மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் வகையில் சேலத்தில் நடத்தப்பட்ட ஒரு நாள் கல்லூரி மாணவி நிகழ்ச்சி அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.  



சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் "ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை" என்ற தலைப்பில் 30 வயது முதல் 60 வயதுடைய மகளிர் தங்களின் வயதை மறந்து நடனமாடியபடி கல்லூரி பேருந்தில் பயணித்தனர். நாள்தோறும் தங்களின் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்புவோர், இன்றைக்கு அவர்களே கல்லூரி மாணவியராக செல்லும்போது சிறகே இல்லாமல் பறக்கும் பறவை போன்றே காட்சியளித்தனர்.


பேருந்தில் இருந்து இறங்கி வந்த மகளிர் தங்கள் விருப்பப்பட்ட வகுப்பறைகளுக்கு சென்று ஒரு நாள் கல்லூரி மாணவிகளுடன் அமர்ந்து அடிப்படை தொழில் முனைவோர் பயிற்சி, தியானம், யோகா, ஆடை வடிவமைப்பு துறைகளில் வகுப்புகள் நடைபெற்றன. தங்களுடைய மகள் வயதுடைய பெண்களுடன் மாணவிகளில் ஒருவராக அனைவரும் கல்வி பயின்றனர். இளம் வயதில் கிடைக்காமல் போன கல்லூரி பருவத்தை நினைத்து நினைத்து ஏக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் கல்லூரி மாணவி அனுபவம் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக மகளிர் தெரிவித்தனர்.



இதுகுறித்து ஒரு நாள் கல்லூரி மாணவி கூறுகையில், ஆடை வடிவமைப்பு படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பு வரை படித்த என்னால் மேல் படிப்பு படிக்க முடியவில்லை. தற்போது தையல் இயந்திரம் வைத்து சொந்தமாக கடை நடத்தி வருகிறேன். இருப்பினும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இன்று நிறைவேறி உள்ளது. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் இது என் வாழ்வில் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது என தெரிவித்தார். வீட்டில் முடங்கி கிடந்த எங்களைப் போன்ற பெண்களை கல்லூரி பேருந்தில் அழைத்து வந்து, கல்லூரி மாணவிகளுடன் சக மாணவியாக அமர வைத்து வகுப்பு எடுத்தது தங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. நாங்கள் கட்டாயம் எங்களது குழந்தைகளை படிக்க வைப்போம். படிப்பு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியமானது. கல்வி கற்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. பெண்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைத்து விட வேண்டும் என உருக்கமாக தெரிவித்தார்.