அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்று அறிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்துப் பேசினார்.

Continues below advertisement

இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை

இதைத் தொடர்ந்து ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

Continues below advertisement

பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர். 55-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்களின் பணி பாதுகாப்பில் சமரசமில்லை

தொடர்ந்து, ‘’முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது. சட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து போராடுவோம்” என கூட்டத்தில் அமைச்சர் அன்பில் தெரிவித்தார். 

 தொடர்ந்து தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்துப் பேசினார். அப்போது திமுக வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சன் உடன் இருந்தார்.

அடுத்த மாதம் டெல்லி செல்லும் அன்பில்?

டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அடுத்த மாதம் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.