எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மருத்துவம் படிக்க விரும்பி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் கிடைக்கவில்லையென்றால் வேறு வாய்ப்புகளே இல்லையென்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அவற்றைத் தாண்டி ஏராளமான துணை மருத்துவப் படிப்புகள் குவிந்து கிடக்கின்றன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எதுவுமில்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
என்னென்ன படிப்புகள்?
பி.பார்ம், பி.பி.டி., நர்ஸிங் படிப்பு, பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியோகிராபி, கார்டியா பல்மனரி டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி,க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன.
அதேபோல ஃபார்மஸி படிப்பும் படிக்கலாம். எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம். வ்மயக்க மருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம்.
67,079 பேர் விண்ணப்பம்
இதற்கிடையே துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2024- 25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். மொத்தம் 67,079 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர், ’’எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும். முன்பே கலந்தாய்வு நடத்தினால் மருத்துவக் கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவர்கள் இடங்கள் காலியாகி விடுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (ஜூலை 6) தொடங்க உள்ள நிலையில், விண்ணப்பித்த மாணவர்கள், www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கலந்தாய்வு குறித்து அறியலாம்.