தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணையை வெளியிட உள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன. 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது.
இவர்களுக்கான தேர்வுகள் வழக்கம்போல் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்றன. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
அட்டவணை வெளியீடு?
இந்த நிலையில், 2023- 24ஆம் ஆண்டு10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இதை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவம்பர் 16) சென்னையில் அறிவிக்க உள்ளார்.
முன்னதாக குழந்தைகள் தின விழா கடந்த நவம்பர் 14ம் தேதி சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறி இருந்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் அட்டவணை வெளியிடப்ப்படும்’’ என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.