அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு, இங்கிலாந்தில் உயர்கல்வி பயில பிரிட்டிஷ் கவுன்சில் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
2026- 27ஆம் கல்வியாண்டிற்கான STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு, முழு உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன சலுகைகள்?
இந்த உதவித்தொகைத் திட்டமானது முற்றிலும் இலவசம். குறிப்பாக,
- பல்கலைக்கழகக் கல்விக் கட்டணம் முழுவதும் தள்ளுபடி.
- மாதாந்திர அன்றாடச் செலவுக்கான உதவித்தொகை.
- விசா மற்றும் விமானப் பயணக் கட்டணங்கள்.
- மருத்துவக் காப்பீடு மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சி ஆதரவு.
இந்த வகையில் ஒரு மாணவிக்குக் கிடைக்கும் இந்த உதவித்தொகையின் குறைந்தபட்ச மதிப்பு 40,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36.16 லட்சம்) ஆகும்.
எந்தெந்தபல்கலைக்கழகங்கள்?
இங்கிலாந்தின் புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக்கழகம் (University of Edinburgh)
கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ( University of Glasgow)
மான்செஸ்டர் பல்கலைக்கழகம் (University of Manchester )
லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் (Queen Mary University of London)
லண்டன் புருனல் பல்கலைக்கழகம் (Brunel University of London) ஆகியவை இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
விண்ணப்பிப்பதுஎப்படி?
ஆர்வமுள்ள மாணவிகள் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசித் தேதி மாறுபடும் என்பதால், அந்தந்த பல்கலைக்கழக இணையதளங்களில் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று பிரிட்டிஷ் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.
தொடர்ந்து ஆறாவது ஆண்டாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், இதுவரை உலகம் முழுவதும் சுமார் 500 பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 43 யு.கே. பல்கலைக்கழகங்கள் இந்த உதவித் தொகையை வழங்கி உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு womeninstem.scholarships@britishcouncil.org என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
