அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தினை தொடங்கி வைத்து, இலச்சினையை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
(JEE) பயிற்சி வகுப்பின் நிறைவு
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் 65-மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக 26.12.2025 முதல் 10.01.2026 வரை 15-நாட்கள் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பின் நிறைவு விழா மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தினை தொடங்கி வைத்து, இலச்சினையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, வெளியிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-IV தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் மற்றும் புத்தகங்களையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பயின்று காவலர் தேர்வில் வெற்றி பெற்று உடற்தகுதி தேர்விற்கு தயாராகும் 25-மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர்
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது...” உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மாணவர்களுக்கு 15-நாட்கள் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பு பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு உறுதுணையாக நின்ற அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதால் அம்மாணவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும், அனைவரின் கூட்டு முயற்சியோடும் ஏற்படுத்தப்பட்டதே இப்பயிற்சி வகுப்பு. போட்டித்தேர்வுகள் எவ்வாறு இருக்கலாம், எவ்வாறு தயாராவது என்பதே பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தான் இந்த பயிற்சி வகுப்புகள். நாம் நல்ல நிலையில் இருந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மற்றவருக்கு செய்ய முடியும் என்று எண்ணுவதே மனித இயல்பு. அதற்கு, தகுந்த கல்வி சூழலை அமைத்துக் கொண்டு, நல்ல பணியில் அமர்ந்து மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதே இந்நிகழ்ச்சி.
நான் முதல்வன்
ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியோடு இப்பயிற்சி வகுப்பு 15-நாட்களில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக தயாராவதற்கு ஒரு வருட பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் ஒரு ஆயுதம் தான் கல்வி. தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 500 மாணவர்கள் என மொத்தமாக 1500 முதல் 1600 வரை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன. மாணவர்களின் ஒரே குறிக்கோள் கல்வி பயில்வதே. மேலும், அம்மாணவர்களை தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது? தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தருவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது என பல நோக்கங்களை கலந்துரையாடி ஒரே திட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உதவி செய்ய வேண்டும்
அந்த திட்டம் தான் திசை. இந்த திட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவிகரமானதாக அமையும். நாமும் நல்வழியில் சென்று, மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, மாணவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினர். அலுவலர்கள் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, மாணவர்களின் உயர்கல்வி பயில்வதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.