விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன் பொறுப்பு வகித்து வருகிறார். தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றல் விகிதத்தை குறைக்கும் விதமாக பல்வேறு பாதியில் படிப்பை நிறுத்திய மாணவர்களை வீடு தேடிச் சென்று பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தி வருகிறார்.
இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பள்ளி செல்லாத மாணவர்களை நேரில் சந்தித்து பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். படிப்பை பாதியில் நிறுத்திய மாணவன் ஒருவரது வீட்டிற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அந்த மாணவனிடம்,
வீடு தேடிச் சென்ற கலெக்டர்:
உனக்கு வேற ஏதாவது டிரெஸ் வேண்டுமா? புக் வேண்டுமா? பேக் வேண்டுமா? என்ன வேணுமோ கேளு. ஐடிஐ-யில் சேர்த்து விடுவாங்க. ஒரு வருஷ கோர்ஸ் மட்டும் படி. படிச்சு முடிச்ச உடனே வேலைக்கு போகலாம். இப்படியே இருந்தா ஒன்னும் இல்லாமதான் போகனும். கூலி வேலைக்குத்தான் போகனும். புரியுதா மிஸ் பண்ணிடாத இந்த வாய்ப்பை.
உனக்கு ஸ்கூல் புடிச்சா அந்த ஸ்கூல்ல படி. இல்லாட்டி வேற ஸ்கூல்ல படி. அந்த ஸ்கூல்ல சேத்து விட்றேன். ஸ்கூல் வேண்டாம்னா ஐடிஐ போ. ரெண்டுல ஒன்னு போகனும். ஒரு வருஷம் படிச்சா நல்ல வேலைக்கு போவல.
வேலை வாங்கித் தர்றேன் படி:
விருதுநகர் ஐடிஐ இருக்குதுல. தெரியுமா? சூலக்கரையில. அங்க போனனா உனக்கு ஏதாவது தொழிற்கல்வி சொல்லித் தருவாங்க. ஒரு வருஷம் படிச்சா நல்ல வேலைக்கு போயிடலாம். உனக்கு வேலையும் வாங்கித் தர சொல்றேன். இல்லனா ஃபயர் சர்வீஸ்னு ஒரு கோர்ஸ் இருக்குது. அது படிச்சா நம்மூர்ல பட்டாசு ஃபேக்டரிக்கு வேலைக்கு போயிடலாம். நல்ல சம்பளம் கிடைக்கும். அது படிக்குறது இல்ல. வேலை பழகுறதுதான்.
இப்போ உன்னை அப்பா அம்மா பாத்துக்குவாங்க. அதுக்கு அப்புறம் யாரு பாத்துக்குவா? நீதானே அவங்களை பாத்துக்கனும். வேலைக்கு போகாம காசு எப்படி வரும்.
இவ்வாறு அவர் அந்த மாணவருக்கு அறிவுரை கூறினார்.
மேலும், அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மாணவனை அறிவுரை கூறி படிக்க அனுப்புமாறு அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் மாணவரை தட்டிக்கொடுத்து அறிவுரை வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.