விருதுநகரில் உள்ள ஆர்.ஜே.குப்பை வங்கி (RJ Garbarage Bank) மூலம் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், மாணவர்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற காகிதம், நெகிழி முதலிய திடக்கழிவு பொருட்களை  கொண்டு வந்தால், அதனை எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுவதோடு, திடக்கழிவுகளை கொண்டு வரும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

புத்தக கண்காட்சி
 
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுருத்தலின்படி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் “அறிவும் வளமும்” என்ற தலைப்பின் கீழ் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்காக பிரத்யேகமாக தொல்லியல் துறை அரங்கு, அறிவரங்கம், பசுமை அரங்கு, புத்தக நன்கொடை அரங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
 
மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
 
அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு நெகிழி பயன்பாட்டின் பாதிப்பு குறித்தும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி குறித்தும் எடுத்துக்கூறும் வகையில் விருதுநகரில் உள்ள ஆர்.ஜே.குப்பை வங்கி(RJ Garbarage Bank) மூலம் அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இந்த அரங்கில் மாணவர்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற காகிதம், நெகிழி முதலிய திடக்கழிவு பொருட்களை  கொண்டு வந்து, அதனை மக்கும், மக்காத பொருட்கள் என பிரித்து, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுவதோடு, திடக்கழிவுகளை கொண்டு வரும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும் இக்கண்காட்சியில் அமைக்கப்படவுள்ள அறிவு அரங்கத்தில் வேலை வாய்ப்பு, உயர் கல்வி, சிறப்புத் திட்டங்கள், தொழில் முனைவு வழிகாட்டி, அறிவியல் அறிவோம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளன.
 
புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
இக்கண்காட்சி  காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு வகையான போட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், தலை சிறந்த ஆளுமைகளின் சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.