மேற்கு வங்கத்தில் வகுப்பறையிலேயே முதலாமாண்டு மாணவனை பேராசிரியை ஒருவர் திருமணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொல்கத்தாவில் இருந்து சுமார் 150 கி.மீ. தூரத்தில் நாடியாவில் ஹரிங்கதா தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. மெளலானா அபுல் கலாம் அசாத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின்கீழ் இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு உளவியல் துறை இயங்கி வருகிறது. அதில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


உடை, அலங்காரம், மாலை


வீடியோவில் உள்ள பேராசிரியை பெயர் பாயல் பானர்ஜி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மண மகளுக்கு உரிய உடை, அலங்காரங்களைச் செய்து மாலை அணிந்திருக்கிறார். அவர் முதலாமாண்டு மாணவனை மணம் புரிகிறார்.


இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களில், மாணவன் ஆசிரியரின் நெற்றியில் குங்குமம் வைக்கிறார். திருமண சடங்குகளான மாலை மாற்றுதல், ஹல்தி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. 


அதேபோல ரோஜாவையும் மாணவன் ஆசிரியரிடம் தருகிறார். பல்கலைக்கழக செய்திக் குறிப்பேட்டில் மாணவன் மற்றும் பேராசிரியரின் கணவன், மனைவி கையெழுத்திட்ட கடிதமும் வைரலாகி வருகிறது. அதில் கணவன், மனைவி இருபுறமும் தலா 3 சாட்சிகள் கையெழுத்திட்டனர். 


நாடகத்துக்காக எடுக்கப்பட்டது


இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் உண்மையில்லை, நாடகத்துக்காக எடுக்கப்பட்டது என்று பேராசிரியை மறுப்பு தெரிவித்துள்ளார். 


உளவியல் பேராசிரியரான பாயல் பானர்ஜி, ''இது சைக்காலஜிக்கல் டிராமாவின் (உளவியல் நாடகம்) ஒரு பகுதியே. இந்த வீடியோ வெளியாகி தன் பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவரை அணுக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.