பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது மற்றும் கடந்தாண்டு பொதுத்தேர்வு மற்றும் நடப்பாண்டு காலாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது மற்றும் கடந்தாண்டு பொதுத்தேர்வு மற்றும் நடப்பாண்டு காலாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் இன்று (19.10.2023) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் தனது இருகண்களில் ஒரு கண்ணாக கல்வித்துறையினை கருத்திற்கொண்டு பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மேம்படுவதற்கு வழிவகை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், தற்பொழுது மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் பொதுத்தேர்வினை எழுதிடவும், நூறு சதவீதம் தேர்ச்சி விகிதம் கிடைத்திட வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களும் மாதந்தோறும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் கடந்தாண்டு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் மாணவ, மாணவியர்களின் காலாண்டு தேர்வின் தேர்ச்சி விகிதம் குறித்து ஒவ்வொரு தலைமையாசிரியர்களுடன் இன்றைய தினம் விரிவாக கேட்டறியப்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மொழிப்பாடங்கள் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, செய்முறை பயிற்சி வகுப்புகள், பேச்சுப்போட்டி, தனித்திறன் போட்டிகளில் கவனம் செலுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவ காலம் தொடங்குவதால் முன்னேற்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். இடிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். அங்கு மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மின்சாதனங்கள் சரியாக இருக்க வேண்டும். கழிப்பிட வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
NMMS. NEET தேர்வு போன்றவற்றிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பு பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். Pre Metric, Post Metric, Girls Insentive விலையில்லா நலத்திட்டங்கள் போன்றவைகளை தலைமையாசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக முடிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் போன்ற தவறாமல் பள்ளிகளில் நடத்திட வேண்டும். 2023-2024 ஆம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதன்மை மாவட்டமாகத் திகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்து, தேர்வு முடிந்தவுடன் திருத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு தொடர்ந்து வரச்செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அதனைச் தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தொய்வு ஏற்படும் பள்ளிகளைப் பார்வையிட்டு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.